கோவை;சமூக வலைதளத்தில் காதல் வயப்பட்டு திருமணம் செய்த மனைவி மாயமானது பற்றி கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.கோவை தீயணைப்புத்துறையில் பணியாற்றி வரும், 27 வயது வாலிபருக்கும், அனிதா, 25, என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளத்தில் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நேரில் சந்தித்தபோது காதல் உருவானது.அனிதா, தன் பெற்றோர் இறந்து விட்டனர் என்றும், உறவினர்கள் யாரும் இல்லை என்றும் கூறியதை தீயணைப்பு வீரர் நம்பினார். இருவரும் கடந்தாண்டு ஆக., மாதம் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் அனிதா இரண்டு முறை வெளியூர் சென்று விட்டு சில நாட்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார்.
ஜூன் 2ம் தேதி தஞ்சை சென்று உறவினர்களை பார்க்கப் போவதாக, அலுவலகத்தில் இருந்த கணவரிடம் அனிதா போனில் தெரிவித்தார். 'கர்ப்பமாக இருப்பதால் வெளியூர் செல்ல வேண்டாம்' என்று கணவர் கூறியதை பொருட்படுத்தாத அனிதா, வீட்டை விட்டுச் சென்று விட்டார்.சில நாட்கள் கழித்து, போனில் பேசிய மர்ம நபர் ஒருவர், 'உங்கள் மனைவி அனிதாவுக்கு தஞ்சை எம்.ஆர்., மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது' என்று தீயணைப்பு வீரரிடம் தெரிவித்தார். அதை நம்பி அங்கு சென்ற போது, அந்த பெயரில் எம்.ஆர்., மருத்துவமனையில் யாரும் சிகிச்சைக்கு சேரவில்லை என்று தெரியவந்தது.மனைவி வைத்திருக்கும் போன் மற்றும் அழைப்பு வந்த போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர், கோவை போலீசாரிடம் 'மனைவியை காணவில்லை' என்று புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார்.