கோவை:கோயம்புத்துார் மளிகை வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் பாஸ்கரன், தலைவர் பிரபாகர் உள்ளிட்டோர், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் அளித்த மனு:வேளாண் விளை பொருட்கள் அதிகம் விளையும் பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், விளை பொருட்களை விற்பனை செய்யும் வசதியையும், அதற்கான கடன் வசதியையும் தமிழக அரசு செய்துதர வேண்டும்.வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களுக்கு, அந்தந்த மாநிலத்தில் 'செஸ்' வரி செலுத்தியிருந்தாலும், அதே பொருட்களுக்கு மீண்டும் தமிழகத்தில் 'செஸ்' வரி வசூலிக்கப்படுகிறது.சந்தை கட்டணமாக, 2020-21ம் ஆண்டுக்கு சுமார், 85 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாக கிடைத்துள்ளது. இவ்வருவாயில் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை சிறப்பாக பராமரிக்க வேண்டும். இந்நிலையில், தமிழக அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் விளைபொருள் சட்டத்தால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள், மளிகை கடையிலுள்ள வணிகர்கள், உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள், கிடங்குகள் வைத்து மொத்த வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால், அரசுக்கு வருவாய் வருவதற்கு மாறாக, வணிகர்கள், அதிகாரிகளால் அச்சுறுத்தப்படும் நிலை ஏற்படும். இவற்றை கவனத்தில் கொண்டு, 40 அத்தியாவசிய வேளாண் பொருட்களுக்கு 'செஸ்' வரி விதிப்பிலிருந்து அரசு விலக்கு அளிக்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு வெளியே நடைபெறும் வணிகத்துக்கும் சந்தை கட்டணம்(செஸ்) வசூலிக்க விலக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.