கோவை:வாரம் ஒரு முறை குடிநீர் வழங்குவதற்கான முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.தமிழக-கேரள ஒப்பந்தப்படி, சிறுவாணி அணையில், 10.1 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க வேண்டும். ஆனால், 4.9 கோடி லிட்டரே வழங்கியதால், குடிநீர் வினியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது. தமிழக அரசு தரப்பில் அழுத்தம் கொடுத்ததால், நான்காவது வால்வை கேரள நீர்ப்பாசனத்துறை திறந்தது. அதனால், 10.1 கோடி லிட்டர் தண்ணீர் கிடைக்கிறது.மாநகராட்சி மேற்கு பகுதி மக்களுக்கு, 12 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகிக்கப்பட்டது; இதை, வாரத்துக்கு ஒருமுறை வழங்கும் வகையில் கால இடைவெளியை குறைக்க, குடிநீர் பிரிவினர் திட்டம் வகுத்திருக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக ஜூன், 1ல் தென்மேற்கு பருவ மழை துவங்கும். ஆனால், சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தாமதமாகி வருவதால், தினமும் பெறப்படும் தண்ணீரின் அளவை, 7.5 கோடி லிட்டராக குறைக்கலாமா என ஆலோசிக்கப்படுகிறது. அவ்வாறு செய்தால், தற்போதுள்ள இருப்பை கொண்டு, ஆக., இறுதி வரை தட்டுப்பாடின்றி வழங்க முடியும். அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க முதல்வர் வலியுறுத்தி இருப்பதால், இம்முறை அனுமதி கிடைக்கும் என நினைக்கிறோம்' என்றனர்.