கோவை;கோவையின் தொழில் வளர்ச்சிக்கு சர்வதேச நாடுகளுடன் நேரடி விமான சேவையை வழங்குமாறு 'கொடிசியா' கோரிக்கைவிடுத்துள்ளது.கோவை வந்த வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ்கோயலிடம், கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கத்தினர்(கொடிசியா) அளித்த மனு:கோவையின் தொழில் வளர்ச்சிக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்பட வேண்டும். மேலும், அதற்கான விமான நிலைய உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர்லாங்க், ஏர்அரேபியா மற்றும் எமிரேட்ஸ் போன்ற பெரும்பாலான விமான ஆபரேட்டர்கள், பல்வேறு சர்வதேச இடங்களுக்கு செயல்பட தயாராக உள்ளனர்.ஆனால், கோவை விமான நிலையம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
அப்போதுதான் சர்வதேச விமானங்கள் எளிதாக தரையிறங்கி, புறப்பட வசதியாக இருக்கும். கோவை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டால் வருவாய் அதிகரிக்கும். 4,000 ஏக்கர் நிலப்பரப்பில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச விமான நிலையம் அமைக்கலாம். அதில் சரக்கு வளாகம், விமானப் பராமரிப்பு ஹேங்கர்கள், விண்வெளிப் பூங்காக்கள் மற்றும் வான் பாதுகாப்பு உற்பத்தி தொழில்கள் ஆகியவை அமைக்கலாம்.விமான நிலைய விரிவாக்கத்தை பொருத்தே, மேற்கு தமிழகத்திலுள்ள வணிகர்களின் வளர்ச்சி அமைந்துள்ளது. கோவை விமான நிலையத்தை ஒவ்வொரு ஆண்டும், 75 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் சூழல் ஏற்படும். மேலும் கோவையிலிருந்து டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா மற்றும் வடகிழக்கில் உள்ள சில விமான நிலையங்களுக்கு எளிதாக பயணிகள் சேவை வழங்கலாம். இதற்கான பணிகளை மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் செய்யும் என்ற நம்பிக்கையில் 'கொடிசியா' உள்ளது.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.