கோவை;சட்டம்--ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பணியை மேம்படுத்தும் நோக்கத்தில் கோவை மாநகர போலீஸ் சார்பில் 'ஏரியா கமிட்டி'கள் அமைக்கப்பட்டுள்ளன.போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கவும், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு பணியை மேம்படுத்தவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஒவ்வொரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் பொதுமக்களை உள்ளடக்கி, ஏரியா கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக, போத்தனுார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 11 ஏரியா கமிட்டிகளும், ராமநாதபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 8 ஏரியா கமிட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இதன் துவக்க விழாவில் பேசிய உதவி கமிஷனர் சதீஷ்குமார், 'முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசார், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களில் ஆர்வமுள்ள அனைவரும் ஏரியா கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்' என்றார்.புலியகுளம் மற்றும் குனியமுத்துாரில் நடந்த ஏரியா கமிட்டி துவக்க நிகழ்ச்சிகளில் போலீஸ் துணை கமிஷனர் தெற்கு சிலம்பரசன் கலந்து கொண்டு பேசினார். குனியமுத்துாரில் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். செல்வபுரம், சாய்பாபா காலனி கோவில் மேடு, வெரைட்டி ஹால் ரோடு, ஆர்.எஸ். புரம், உக்கடம் ஆகிய இடங்களிலும் ஏரியா கமிட்டி துவக்க நிகழ்ச்சிகள் நடந்தன. ஏரியா கமிட்டி உறுப்பினர்களின் உதவியுடன், அந்தந்த பகுதிகளில் இருக்கும் 'சிசிடிவி' கேமராக்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படும்.
ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் ஆகியவற்றின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.ஏரியா கமிட்டி உறுப்பினர்களை கொண்டு சமூக வலைதள குழு தொடங்கப்படும். உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் நடக்கும் சட்ட விரோத செயல்கள், அத்துமீறல்கள் பற்றி குழுவில் தகவல் தெரிவிக்கலாம். குழுவில் தகவல் தெரிவிக்க தயக்கம் இருப்பவர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு நேரடியாகவும் தெரிவிக்கலாம். அது மட்டுமின்றி, தெருவிளக்கு எரியாதது, குடிநீர் பிரச்னை பற்றியும் தகவல் தெரிவிக்கலாம். இத்தகைய தகவல்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.