கோவை:நிலம் கையகப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், கோவை தண்ணீர் பந்தல் - விளாங்குறிச்சி ரோடு மேம்பால வேலையை மாநில நெடுஞ்சாலைத்துறை நிறுத்தியுள்ளது.கோவை, அவிநாசி ரோடு மற்றும் சிங்காநல்லுார் பகுதியில் இருந்து வருபவர்கள், விளாங்குறிச்சி ரோட்டுக்குச் செல்ல, தண்ணீர் பந்தல் ரோடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுவதால், தண்ணீர் பந்தல் ரோட்டில், 305 மீட்டர், விளாங்குறிச்சி ரோட்டில், 217 மீட்டர், ரயில்வே தண்டவாள பகுதியில், 30 மீட்டர் என, 552 மீட்டர் நீளத்துக்கு, இரு வழிச்சாலையாக மேம்பாலம் கட்ட, 2006ல் தமிழக அரசு உத்தரவிட்டது; ரூ.12.45 கோடி ஒதுக்கப்பட்டது.சர்வீஸ் ரோட்டுக்கு, 2-2.5 மீட்டர் அகலத்துக்கு, 35 பேரின் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த இருவர் எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.
இதனால், நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் வேலையை துவக்காமல் இருந்தனர். அதேநேரம், ரயில்வே தரப்பில், தண்டவாள பகுதியில் பாலம் கட்டி விட்டதால், கேட் மூடப்பட்டுள்ளது.இதனால், விளாங்குறிச்சி ரோட்டுக்கு, ஹோப் காலேஜ் பாலம் கடந்து, இடதுபுறம் திரும்பி, டைடல் பார்க் வழியாக, சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. அலைச்சலை தவிர்க்க, பாலம் பணியை விரைந்து துவக்க வேண்டுமென, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, தி.மு.க., தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அதனால், வடக்கு பகுதியில் பாலம் பணியை துவக்க, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்து, கடந்தாண்டு, ஜூன், 16ல் பூமி பூஜை போட்டு, துாண்களுக்கு குழி தோண்டினர். இச்சூழலில், ரோடு அகலப்படுத்துதல் மற்றும் பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தாமல், வேலையை துவக்கக் கூடாதென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, நிலம் கையகப்படுத்திய பின் கட்டிக் கொள்ளலாம் என, பாலம் வேலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டுள்ளன. 15 ஆண்டுகளுக்கு பின் துவங்கிய வேலை மீண்டும் தடைபட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சர்வீஸ் ரோட்டுக்காக பாலத்தின் இருபுறமும் நிலம் கையகப்படுத்த வேண்டும். ஆனால், ஒரே பகுதியில் நிலம் கையகப்படுத்த வேண்மென கூறி, நில உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். நிலம் கையகப்படுத்தாமல் வேலையை செய்து, பணிகள் பாதியில் நிற்கக்கூடாது என கூறியிருப்பதால், வேலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது' என்றனர்.