திருப்பூர்;பி.ஏ.பி., பிரதான கால்வாயில், அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, சிதிலமடைந்து காணப்படும் பகுதிகளை புதுப்பிக்க, 25.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பி.ஏ.பி., திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றனதிட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்பட்டு, 126 கி.மீ., துாரம் உள்ள பிரதான கால்வாய் வழியாகவும், 17 கிளைக்கால்வாய் மற்றும் 98 பகிர்மான கால்வாய்கள் வழியாக பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.திட்டத்தின் ஆதாரமாக உள்ள பிரதான கால்வாயில், வினாடிக்கு, 900 முதல், 1,150 கனஅடி வரை நீர் செல்கிறது.திட்டம் துவங்கியது முதல், பாசனத்திற்கு நீர் வழங்கும் ஆதாரமாக உள்ள பிரதான கால்வாய் முழுமையாக பராமரிக்கப்படாததால், பல இடங்களில் சிதிலமடைந்து காணப்படுகிறது. அதிலும், திருமூர்த்தி அணை யிலிருந்து, 7வது கி.மீ., வரை, இரு புறமும் கரிசல் மண் பூமியாக உள்ளதால், கரை சரிவு, மழை பெய்தால், உடைப்பு மற்றும் நீர் இழப்பு என பெரும் சிக்கல் நீடித்து வந்தது.இதனை புதுப்பிக்க வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.பல கட்ட ஆய்வு, முழுமையாக புதுப்பிக்க திட்ட மதிப்பீடு, 100 கோடி ரூபாய் தேவை என அரசு நிதியை எதிர்பார்த்திருந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப்பின், அதிகம் சேதமடைந்த, 5 பகுதிகளை புதுப்பிக்க, 25.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பிரதான கால்வாயில், உடுமலை தாலுகா பகுதியில், திருமூர்த்தி அணையிலிருந்து, கி.மீ., 1.200 முதல், 2 வது கி.மீ., வரை பங்களா மேடு பகுதியில் முழுமையாக கால்வாய் சிதிலமடைந்துள்ளது. இதனால், நீர்க்கசிவு அதிகரித்த நிலையில், அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது.அதே போல், 3 வது கி.மீ., முதல், 3.300 வரை, மொடக்குப்பட்டி ரோடு பகுதியில், கால்வாயின் இரு புறமும் கரை மற்றும் மழை நீர் வெளியேறும் வகையில், கால்வாய்க்கு கீழ் அமைந்துள்ள மழை நீர் வெளிப்போக்கி சுரங்கக்கால்வாய் சேதமடைந்துள்ளது.மேலும், தீபாலபட்டி - மொடக்குப்பட்டி ரோட்டில், கால்வாயில் கி.மீ., 4.500 முதல், 4.800 வரையும் கடுமையாக சேதமடைந்து, கால்வாய் முழுமையாக காணாமல் போயுள்ளது.அதே போல், பொள்ளாச்சி தாலுகா கெடிமேடு பகுதியில், 20.600 முதல் 20.900 வரையும், 32வது கி.மீ., முதல், 36 வது கி.மீ., வரையும் கடுமையாக சேதமடைந்துள்ளது.இவ்வாறு, கால்வாயில் கடுமையான பாதிப்பு உள்ள பகுதிகளில் மட்டும், புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள, தமிழக அரசு 25.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.விவசாயிகள் கூறியதாவது:திட்டம் துவங்கியது முதல் பிரதான கால்வாய் புதுப்பிக்கப்படாததால், நீர் இழப்பு மற்றும் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நிரந்தர தீர்வு காண, ஆய்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடு தயாரித்து புதுப்பிக்க வலியுறுத்தப்பட்டு வந்ததுஅதிகமாக சிதிலமடைந்த பகுதிகளை மட்டும் புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணி நடந்து வருவதால், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, ஆக., 15ம் தேதிக்கு பின், நீர் திறக்கும் வாய்ப்புள்ளது.எனவே, ஒன்றரை மாதத்திற்குள் முடிக்கும் வகையில், உடனடியாக டெண்டர் விட்டு, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.அதிகாரிகள் கூறுகையில், 'நிதி ஒதுக்கீடு பெற்றுள்ளதால், விரைவில் பணியை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.