பல்லடம்;வரும் 17ல், திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மத்திய அரசின், 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் திடலில் நடக்கிறது; மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார்.நேற்று முன்தினம், பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் ஆய்வு நடந்தது. பொதுக்கூட்டம் நடக்கும் இடத்தில் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் சார்பில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்துக்கு முதல் முறையாக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளார். இத்துடன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட, மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்க உள்ளனர். பொதுக்கூட்டத்தில், 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட உள்ளது. மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளுடன்ஆலோசித்து, பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்'' என்றனர். ஆய்வின்போது, மாவட்ட துணை தலைவர் வினோத் வெங்கடேஷ், ஒன்றிய தலைவர்கள் பூபாலன், சந்தானம் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
டூவீலர் ஊர்வலம்
பா.ஜ., பொதுக்கூட்டத்தையொட்டி, ஆலோசனை கூட்டம் திருப்பூர் - பல்லடம் ரோடு ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில், மாநில பொது செயலாளர் முருகானந்தம், வடக்கு மாவட்ட பார்வையாளர் செல்வகுமார், மாநில செயலாளர் மலர்கொடி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை செய்தனர்.வடக்கு மாவட்ட ஊடகபிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு சார்பில், இருசக்கர வாகன ஊர்வலம் நடந்தது.