பல்லடம்;''இயற்கை முறையில் விளைந்த பாகற்காய் 40 ரூபாய்க்கு விற்கிறது. இதை மதிப்புக்கூட்டி விற்றால் கிலோவுக்கு 400 ரூபாய் வரை விற்க வாய்ப்பு உள்ளது'' என்று கூறுகிறார் கேத்தனுாரை சேர்ந்த இயற்கை விவசாயி.பல்லடம் அருகே, கேத்தனுாரை சேர்ந்த இயற்கை விவசாயி பழனிசாமி, விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் ஏற்படும் நஷ்டத்தை தவிர்ப்பதற்கு உண்டான வழிமுறைகள் குறித்து கூறியதாவது:பல ஆண்டுகளாக இயற்கை முறை விவசாயம் செய்து வருகிறேன். தக்காளி, வெங்காயம், வெண்டை, புடலை, பாகல், அவரை, முருங்கை, கத்தரி, பீர்க்கன் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளும் பயிரிட்டு வருகிறேன். முற்றிலும் இயற்கை விவசாயம் என்பதால், விளைவிக்கும் காய்கறிகளுக்கு நல்ல விலை உள்ளது.காய்கறிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்க, காய்கறிகளை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்கலாம்.உதாரணமாக, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பாகற்காய் கிலோ 40 ரூபாய் வரை விற்கிறது. ஆனால், இதை மதிப்புக்கூட்டி விற்பதால் கூடுதல் லாபம் பெறலாம். இதற்காக, காய்களை வெயிலில் நன்கு காய வைத்து, அவற்றுடன் மஞ்சள், உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து வறுத்து எடுத்து வைத்துவிட்டால், நீண்ட நாட்கள் ஆனாலும் கெடாது. வடகமாக மாற்றி இவற்றை விற்பதால், கிலோ 400 ரூபாய் வரை விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் தவிர்க்கப்படும். இதே முறையில், பல்வேறு காய்கறிகளையும் மதிப்பு கூட்டி விற்க முடியும்.இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய 99439 59241 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.