அவிநாசி;தேங்காய் விலை சரிவால், தென்னை மரங்களை பராமரிக்க முடியாத நிலை, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம் ஆகிய இடங்களில் பல நுாறு ஏக்கர் பரப்பளவிலும், பொங்கலுார், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட இடங்களில் பரவலாகவும் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, ஆறு மாதமாக தேங்காய்க்கு விலை இல்லை என, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போதைய சூழலில், விவசாயிகளின் தோட்டங்களில் இருந்து, ஒரு தேங்காய், 10.50 ரூபாய் முதல், 11.00 ரூபாய்க்கே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.விவசாயிகள் கூறியதாவது:கடந்தாண்டு, ஒரு தேங்காய், 16 ரூபாய் வரை வியாபாரிகளால் வாங்கப்பட்டது; தற்போது உர விலை இரட்டிப்பாகியுள்ளது. போக்குவரத்து செலவும் அதிகம். சாகுபடி செலவு அதிகரித்திருப்பதால், ஒரு தேங்காய்க்கு, 23 முதல், 25 ரூபாய் கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்.தேங்காய் விலை வீழ்ச்சியால், தோட்டங்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தென்னை மரங்களை, தொடர்ந்து பராமரிக்காவிட்டால், நோய் தாக்குதல் ஏற்படும்; காய் பிடிக்கும் தன்மை குறையும்; மகசூல் இழப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.இதனால், அடுத்து வரும் ஆண்டுகளில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும்; தேங்காய் சார்ந்த கொப்பரை, தேங்காய்எண்ணெய் உற்பத்தி கூட பாதிக்கும். தென்னை விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.