முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு போக்குவரத்து பணிமனையில் ஐந்து மாதங்களுக்கு மேலாக குடிநீர் வசதி இல்லாததால் சிரமப்படும் பணியாளர்கள், 'இது குடிநீர் வசதி இல்லாத பஸ் டிப்போ,' என போர்டு எழுதி வாசலில் தொங்கவிட்டுள்ளனர்.முதுகுளத்துார்-கமுதி சாலை துாரி கிராமம் அருகே அரசு போக்குவரத்து பணிமனை செயல்படுகிறது. மேலாளர், உதவி பொறியாளர், டிரைவர்கள், கண்டக்டர்கள், மெக்கானிக் என 240 பேர் வேலை செய்கின்றனர்.
இங்கு 5 ஆண்டுகளுக்குமுன்பு குடிநீர் வசதிக்காகஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட்டது. காலப்போக்கில் பராமரிப்பின்றி செயல்படவில்லை. இதனால் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.போக்குவரத்து ஊழியர்மத்திய சங்க துணைச்செயலாளர் திருமலை கூறுகையில், குடிநீர் இல்லாமல் சிரமப்படுகிறோம். தினமும் பணியாளர்கள் டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்குகின்றனர். பலமுறை புகார் அளித்தும் நிர்வாகம் காதில் எட்டவில்லை.
இதனால் வேறு வழியின்றி குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகிறோம்.எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பணிமனை முன்பு ''குடிநீர் இல்லாத பணிமனை,'' என்று அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். இதை பார்த்தாவது குடிநீர் வசதி செய்வார்களா என்பதும் சந்தேகமே, என்றார்.