வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ''நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்படுவது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கி விடும்,'' என, பா.ஜ., முன்னாள் செய்தி தொடர்பாளர் நுாபுர் சர்மா தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ., முன்னாள் செய்தி தொடர்பாளர் நுாபுர் சர்மா, 'டிவி' விவாதத்தில் பேசுகையில், முஸ்லிம் மதத்தை அவமதிக்கும் விதமாக கருத்து தெரிவித்தது சர்ச்சை ஏற்படுத்தியது. தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அனைத்து வழக்குகளையும் டில்லிக்கு மாற்றக் கோரி நுாபுர் சர்மா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த, பார்திவாலா அடங்கிய அமர்வு, 'நாடு தீ பிடித்து எரிவதற்கு நுாபுர் சர்மாவின் பேச்சே காரணம்' என, உத்தரவிட்டனர். இந்த உத்தரவை பலர் விமர்சித்தனர்.

இந்நிலையில், ''நீதிமன்ற உத்தரவுகளையும், நீதிபதிகளையும் தனிப்பட்ட முறையில் கடுமையாக தாக்கி கருத்து தெரிவிக்கும் போக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்,'' என, நீதிபதி பார்திவாலா நேற்று தெரிவித்தார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் பேசியதாவது:நம் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், சர்வதேச அளவில் சிந்தித்து, உள்ளூர் அளவில் செயல்பட வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இந்த சிந்தனை மிக சிறப்பானது. இதன் வாயிலாக சர்வதேச அளவில் நம் தொலைநோக்கு பார்வை பூர்த்தி அடைவதுடன், நாட்டில் உள்ள அனைவரது நலன் மற்றும் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.