குருவையும் மிஞ்சிய சிஷ்யன் அந்துமணி:வாசகர் திருவிழாவில் புகழாரம்

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை-''குருவை மிஞ்சிய சிஷ்யன் அந்துமணி,'' என, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், வாசகர் திருவிழாவில் அந்துமணிக்கு புகழாரம் சூட்டினார். 'தினமலர்' - 'வாரமலர்' நாயகன் அந்துமணியின் நேசகர பேரவை சார்பில், வாசகர் திருவிழா நேற்று கோவையில் நடந்தது.கோவை, பேரூர் சிறுவாணி சாலையில் உள்ள, பச்சாபாளையம் பி.எம்.என்., சுபா சுப்ரமணியன் விக்னேஷ் மஹாலில் நடந்த விழாவுக்கு,

கோவை-''குருவை மிஞ்சிய சிஷ்யன் அந்துமணி,'' என, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், வாசகர் திருவிழாவில் அந்துமணிக்கு புகழாரம் சூட்டினார்.



latest tamil news


'தினமலர்' - 'வாரமலர்' நாயகன் அந்துமணியின் நேசகர பேரவை சார்பில், வாசகர் திருவிழா நேற்று கோவையில் நடந்தது.கோவை, பேரூர் சிறுவாணி சாலையில் உள்ள, பச்சாபாளையம் பி.எம்.என்., சுபா சுப்ரமணியன் விக்னேஷ் மஹாலில் நடந்த விழாவுக்கு, 'தினமலர்' நாளிதழ் கோவை பதிப்பு செய்தி ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், அந்துமணி எழுதிய கேள்வி - பதில், பா.கே.ப., அமெரிக்காவில் அந்துமணி உள்ளிட்ட, 20 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.விழாவின் ஒரு பகுதியாக, கோவை, 'பீனிக்ஸ் ரன்னர்ஸ் கிளப்' சார்பில், 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், 75 மாரத்தான் வீரர்கள், ரேஸ் கோர்ஸில் இருந்து பேரணியாக, 11.5 கி.மீ., தேசியக் கொடி ஏந்தியபடி ஓடி வந்தனர்.மாரத்தான் பேரணியை, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பீனிக்ஸ் ரன்னர்ஸ் கிளப் நிறுவனர் கணேஷ் சிவகுமார், டாக்டர் ராஜ் பஞ்சு பங்கேற்றனர். மாரத்தான் வீரர்கள், மேடையில் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில், கோவை அரசு மருத்துவமனையின் கேன்சர் பிரிவுக்கு, கே.ஆர்.புரம் லயன்ஸ் கிளப் சார்பில், இரண்டு 'டிவி'க்கள், மற்றும் 'ஏசி' வழங்கப்பட்டன. ஹிந்து ஆலய பாதுகாப்பு சங்கம் சார்பில், மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார்.



துணிச்சல் தந்தது

நிகழ்ச்சியில், அந்துமணி நேசகர வாசகர் பேரவை சுபா சுப்ரமணியன் பேசியதாவது:சிறுவயதில் இருந்தே, லேனா தமிழ்வாணன் உள்ளிட்டோரின் நுால்களைப் படித்து, வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால், அந்துமணியின் கேள்வி - பதில்கள் என் தேசபக்தியை மேலும் அதிகரித்ததுடன், நேர்மையையும், துணிச்சலையும் வழங்கின. அவரது நுால்களை கோவையில் அறிமுகம் செய்து, விழா எடுக்க வேண்டும் என்ற என் ஆசை, தற்போது நிறைவேறி இருக்கிறது. அவரின் எழுத்துக்கள், படிப்போருக்கு உந்துதலையும், தேசிய உணர்வையும் அளிப்பவை. அடுத்த ஆண்டு இந்த விழா, புதுச்சேரியில் நடைபெறும்.இவ்வாறு அவர் பேசினார்.




எளிமையும் வலிமையும்

திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது:தன் முகம் காட்டாமல், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், அந்துமணி எழுதுகிறார். எளிமையாக ஆனால், வலிமையாக எழுதுபவர். பொதுவாகவே எழுத்துக்கு ஆற்றல் அதிகம். மக்களுக்காக அவர் நடத்தும் பத்திரிகை, தினம், தினம் ஏராளமான வாசகர்களிடம் மலர்கிறது.இந்த விழாவை, குடும்ப விழாவாகவே பார்க்கிறேன். ஆண்டுதோறும் இந்த விழா நடத்தப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள். படைப்பாளிகளுக்கு ஒருபோதும் வயதாவதில்லை.விரைவிலேயே, கொங்கு மண் மணம் சார்ந்து, எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் இணைந்து ஒரு படம் செய்வோம் என நம்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.




தயாள குணம்

எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேசியதாவது:சினிமாத்துறையினர் என்னை சென்னைக்கு அழைக்கின்றனர். கோவையை விட்டுச் செல்ல எனக்கு மனமில்லை. அந்துமணி முகத்தை காட்டாமல் எழுதினாலும், கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் வாழ்கிறார். 'கல்கண்டு' இதழில் ஒரு கேள்வி - பதில் வராதா என ஏங்கிய காலம் உண்டு. பின், தமிழ்வாணன் மறைவுக்கு பின், அவரது இடத்தில் இருந்தே பணியாற்றும் மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்தது.கடந்த 1987ல், 'பாக்கெட் நாவல்' அசோகனுடன் சென்று, அந்துமணியைச் சந்தித்தேன். வாரமலர் இதழுக்கு ஒரு தொடர் கேட்டார். மூன்று மாதம் அவகாசம் கேட்டேன். அவரோ, 'உடனே தலைப்பு வேண்டும்.

அடுத்த வாரமே தொடர் துவங்க வேண்டும்' என்றார். தலைப்புக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டேன். அவரோ, 'ஐந்தே நிமிடத்தில் தலைப்பு வேண்டும். இரண்டில் ஒன்று சொல்லுங்கள்' என்றார். நான் தலைப்பையே, இரண்டில் ஒன்று எனக் கூறினேன்.உடனடியாக, க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுதும் தொடர்கதை என, விளம்பரத்தை வடிவமைத்து விட்டனர். அதாவது, நினைத்ததை உடனே சாதிக்கும் திறன் கொண்டவர் அந்துமணி. அந்த அளவுக்கு வேகம் உள்ளவர். அவரது தயாள குணம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். உங்களில் பலருக்கும் தெரியாதது அவர், 'மீல்ஸ் ஆன் வீல்ஸ்' என்ற நடமாடும் உணவகத்தை நடத்தி வந்தார். தரமான அசைவ உணவும் கிடைக்கும். அவரும், நானும் நடைபயிற்சி செய்யும் போது, சாலையோரத்தில் ஆதரவற்றோர் இருந்தால், அவர்களுக்கு உடனடியாக பிரியாணி போன்ற தரமான, சுவையான உணவை தானே பரிமாறும் குணம் உடையவர். அவரின் ஈகை குணம் பிரமிக்கத்தக்கது.இவ்வாறு அவர் பேசினார்.




மிகச்சிறந்த நிர்வாகி

எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசியதாவது:அந்துமணி என் சீடர். எழுத்துலகுக்கு அவரை அழைத்து வந்தவன் நான் தான். அவர் மிகச் சிறந்த, நிகரற்ற நிர்வாகி. கடந்த, 1980ல், இலங்கையில் நடந்த உலக ஹிந்து சமய மாநாட்டுக்கு, பத்திரிகையாளராக சென்ற போது தான் அவருடன் முதலில் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தான் எழுதும்படி அவரைத் துாண்டினேன். 'என்ன எழுதுவது' எனக் கேட்டார். 'சிறந்த நிர்வாகத்திறன், சமூகத்தை உன்னிப்பாக கவனிக்கும் திறன், எந்தவொரு ஆளுமையையும் விமர்சிக்கும் துணிவு, நையாண்டி ஆகியவற்றை ஒருங்கே கொண்ட உங்களுக்கு, கேள்வி - பதில் நன்றாக வரும்' என்றேன். நானும் கேள்வி - பதில் எழுதியிருக்கிறேன் என்றாலும், அந்துமணி அந்த விஷயத்தில் குருவையே மிஞ்சிய சீடன் ஆகிவிட்டார். அவ்வளவு சுவாரஸ்யமாக எழுதும் திறன் கொண்டவர்.தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத, விளம்பரம் தேடிக்கொள்ளாத ஒருவரை பத்திரிகை உலகில் பார்ப்பது அபூர்வம். அவ்வளவு அடக்கமானவர். துவக்க காலத்தில், வார இறுதி இணைப்பிதழ்கள் பெயரளவுக்கே வந்தன. இணைப்பிதழ்களுக்கு முக்கியத்துவத்தை கொடுத்த ஆற்றல் அந்துமணிக்கே உண்டு. ஞாயிறு ஆனால், வாரமலரைத் தேடிப்பிடித்து படிக்கும் அளவுக்கு, வாசகர்களை ஈர்த்த ஆற்றல் மிக்க எழுத்தைக் கொண்டவர்.அவரது சமூக அக்கறையை யாரும் மறுத்துப் பேசிவிட முடியாது. அவரது கேள்வி - பதில் பகுதியை, வாழ்வின் நெறிகளாகவே ஏற்கலாம். நிர்வாகம், எழுத்து என, இரண்டிலுமே சாதிக்க முயன்று சறுக்கியவர்கள் ஏராளம். அந்துமணி இரண்டையுமே திறம்படக் கையாள்பவர்.

ஒரே ஒருமுறை, அந்துமணி கேள்வி - பதில் அடுத்த வாரம் வரும் என, அறிவிப்பு வெளியானது. கோபத்துடன் அவரைக் கடிந்து கொண்டேன். அவரின் குரு என்ற முறையில், கோஷமே போடுவேன் என உரிமையுடன் கடிந்து கொண்டேன். அன்றிலிருந்து இன்று வரை அந்துமணி கேள்வி பதில் தொடர்கிறது.கேள்வி - பதில், வாசகர் கடிதங்களுக்கு பரிசுத் தொகை, குற்றாலம் டூர் என, 'தினமலர்' இதழைப்போல, வாசகர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் வேறு இதழ் இல்லை.'பிரபலங்களை பயன்படுத்திக் கொள்; பிரபலமாக்குவதற்கு பயன்பட்டுவிடாதே' என, பத்திரிகை உலகில் ஒரு வழக்கு உண்டு. அதை உடைத்தவர் அந்துமணி. புதியவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் தைரியம் அவருக்கு இருந்தது. ஏராளமான புதிய எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளித்தார். யார் வேண்டுமானாலும் எழுத்தாளர் ஆகிவிட முடியாது. எழுத்து ஒரு தவம்.இவ்வாறு அவர் பேசினார்.




'ஊக்கம் அளித்தார்'

எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் பேசியதாவது:சாவி இதழில் கருத்து வேறுபாடு காரணமாக எழுதுவதை விட்டு விட நினைத்தேன். எழுத்தாளர் ராஜேஷ்குமார் தான், 'வாரமலர் இதழில் முயற்சி செய்யுங்கள்' என்றார். அந்துமணி தான், வாரமலர் இதழில் தொடர்ந்து எழுத ஊக்கமளித்தார். இந்த வளர்ச்சியில் பெரும்பங்கு அவருக்கு உண்டு. துபாயில் இருந்த போதும், தொடர்ந்து என் எழுத்துக்கள், வாரமலர் இதழில் இடம் பெற்றன.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், தேயிலை வாரிய முன்னாள் துணைத் தலைவர் போஜராஜன், பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி தலைவர் சாந்திபிரசாத், ஞானாலயா வள்ளலார் கோட்ட நிறுவனர் திருஞானானந்த சுவாமி, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், தென்ஷீரடி கோவில் நிர்வாக அறங்காவலர் ஜெகநாதன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.விழாக்குழுவினர், அக்னி பூபதி, வழக்கறிஞர் நந்தகுமார், வினோத் மற்றும் பத்திரிகையாளர் நுாருல்லா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர். தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது. வாசகர்களுக்கு, இரவு விருந்துடன் விழா நிறைவு பெற்றது.



latest tamil news



அந்துமணியைத் தேடிய வாசகியர்!

நிகழ்ச்சிக்கு வந்திருந்த வாசக - வாசகியரில் பெரும்பாலானோர், அந்துமணியைத் தேடினர். ஒவ்வொருவரையும் பார்த்து, அந்துமணி இவரா, அவரா என, மற்றவர்களிடம் ஆர்வமாக விசாரித்தனர். 'குற்றாலம் டூருக்கெல்லாம் உடன் வந்தது போல, இங்கும் அமர்ந்திருப்பார். அவரின் உண்மையான முகத்தைக் காட்ட மாட்டேங்கறாங்க' என, வாசகியர் செல்லமாக அலுத்துக் கொண்டனர்.





சாதனையாளர்களுக்கு விருது!

விஜயா பதிப்பகம் வேலாயுதம், அரோமா நிறுவன உரிமையாளர் பொன்னுசாமி, சேவாஸ்திரம் ராமநாதன், புதுச்சேரி டாக்டர்கள் ரவி, உஷா ரவி, 'தினமலர்' கோவை பதிப்பின் செய்தி ஆசிரியர் விஜயகுமார் ஆகியோரின் துறை சார்ந்த மற்றும் அவர்களின் சமூகப்பணிக்காக, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில், அந்துமணிக்கு, 'நம்பிக்கை நாயகன், ஊடக நாயகன்' ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஐஷ்வர்யன், சென்னை இன்று எண்ணற்ற சமூக ஊடக வாய்ப்புகளால் திரும்ப திரும்ப முகம் காட்டி புகழ்பெறும் மனிதர்களூடே அன்று முகம் காட்டாது பிரபலம் அடைந்த திரு.அந்துமணி அவர்கள் அபூர்வமானவரே!
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
04-ஜூலை-202208:02:42 IST Report Abuse
வெகுளி அந்துமணி-லென்ஸ்மாமா இணை தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஆற்றும் அரும்பணி போற்றுதலுக்குரியது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X