வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சேலம்-''வணிகம் தொடர்பான வழக்குகளில், விரைவாக தீர்வு கண்டால், பன்னாட்டு நிறுவன முதலீடு தேடி வரும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பேசினார்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 3.07 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வணிகவியல் நீதிமன்றத்தை, நேற்று திறந்து வைத்த அவர் பேசியதாவது:சேலத்தில் இரு வணிகவியல் நீதிமன்றங்கள் துவக்கப்பட்டுள்ளன. அது முதன்மை நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் என, தனித்தனியே செயல்படும். இந்த வணிகவியல் நீதிமன்றம், வணிகர், மக்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த மாவட்டமும் நம்பிக்கை பெறும் விதமாக செயல்படும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம் தேவை.
அதனால் வணிகம் தொடர்பான வழக்குகளில் விரைவாக தீர்வு கண்டால், பன்னாட்டு நிறுவன முதலீடுகள் தேடி வரும். அத்துடன் முதலீடு மீதான நம்பிக்கையை, வணிகவியல் நீதிமன்றம் ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுந்தர், சதீஷ்குமார், அப்துால் குத்துாஸ், இளந்திரையன், கலெக்டர் கார்மேகம், எஸ்.பி., ஸ்ரீஅபினவ், வக்கீல் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.