பத்திரிக்கையாளரின் அனுபவங்கள்: அரசியலில் ஜெயலலிதா சந்தித்த சட்ட போராட்டங்கள்!| Dinamalar

பத்திரிக்கையாளரின் அனுபவங்கள்: அரசியலில் ஜெயலலிதா சந்தித்த சட்ட போராட்டங்கள்!

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (8) | |
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசியல் வாழ்க்கையில் ஆரம்பமே போராட்டம் தான். அவரை ஏற்றுக் கொள்ளாத, அ.தி.மு.க., மூத்த தலைவர்கள், பல வகையிலும் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். அவற்றை எல்லாம் திறம்படச் சமாளித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், அரசியல் போராட்டத்தோடு, சட்ட போராட்டத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.கடந்த 1988ல், தமிழகத்தில் நடைபெற்ற

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அரசியல் வாழ்க்கையில் ஆரம்பமே போராட்டம் தான். அவரை ஏற்றுக் கொள்ளாத, அ.தி.மு.க., மூத்த தலைவர்கள், பல வகையிலும் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.latest tamil news


அவற்றை எல்லாம் திறம்படச் சமாளித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், அரசியல் போராட்டத்தோடு, சட்ட போராட்டத்தையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.கடந்த 1988ல், தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்ட காரணத்தால், தி.மு.க., ஆட்சியை கைப்பற்றியது.

அப்போது தான் அந்த சம்பவம் நடைபெற்றது.மிகுந்த மன வேதனையில் இருந்த ஜெயலலிதா, அரசியலில் இருந்து விலகுவதாக கூறி, 1989, மார்ச் 1ம் தேதி பத்திரிகைகளுக்கு ஒரு கடிதமும், மற்றொரு கடிதத்தில், தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, அன்றைய சபாநாயகர் தமிழ்க் குடிமகனுக்கு அனுப்பி வைத்தார்.
திருப்பித் தந்து விடு

இந்த விபரத்தை தெரிந்து கொண்ட சசிகலாவின் கணவர் நடராஜன், தன் ஆட்களின் வாயிலாக அந்த கடிதங்களை எடுத்து சென்ற நபரிடமிருந்து துாக்கி சென்று விட்டார். தன் கடிதம் சபாநாயகருக்கு சென்றடையவில்லை என்பதை அறிந்த ஜெயலலிதா, நடராஜன் வீட்டிற்கு சென்றார். இவரது வருகையை, முன்கூட்டியே அறிந்து கொண்ட நடராஜன், கதவை பூட்டிவிட்டு மேல் மாடிக்கு சென்று விட்டார்.இதனால் மிகவும் கோபம் அடைந்த ஜெயலலிதா, உரத்த குரலில், 'என் பொருளை எடுத்துச் செல்ல உனக்கு என்ன உரிமை உள்ளது? அதை திருப்பித் தந்து விடு...' என்று நடராஜனை திட்டி தீர்த்து விட்டு, தன் போயஸ் இல்லத்திற்கு திரும்பினார்.

நடராஜன் வீட்டிற்கு யார் யாரெல்லாம் வந்து செல்கின்றனர் என்பதை, தமிழக அரசின் உளவுத்துறை போலீசார், கண்காணித்து வந்தனர். அவர்கள், நடராஜன் வீட்டின் முன் ஜெயலலிதா கத்தி கூச்சலிட்டதை, மேலிடத்திற்கு தெரிவித்தனர்.அதன் மறுநாளே, காவல் துறையினர் நடராஜன் வீட்டை, 'சர்ச் வாரன்ட்' மூலம் சோதனை செய்து, பின், நடராஜனை மட்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.அப்போதே, ஜெயலலிதாவுக்கு நடராஜனின் மீதிருந்த கோபம், அப்படியே அப்போதைய முதல்வர் கருணாநிதியின் மீது திரும்பியது.உடனடியாக தன் வழக்கறிஞர் கே.சுப்பிரமணியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடராஜன் கைது விவகாரத்தை தெரிவித்தார்

ஜெயலலிதா.உடனடியாக கே.சுப்பிரமணியன் நடராஜனின் வீட்டுக்கு சென்ற போது, அங்கு நடராஜனின் நண்பர் வி.ஜி.பி.சார்லஸ் என்பவர் மட்டும் இருந்தார். அப்போது நடராஜன், கமிஷனர் அலுவலகத்திலேயே உட்கார வைக்கப்பட்டு இருந்தார்.வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன், நடராஜனின் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த கடிதங்களை பார்த்தவுடன் அதிர்ந்து விட்டார். ஏனெனில், அவை ஜெயலலிதாவால் கைப்பட எழுதப்பட்ட ராஜினாமா கடிதங்கள்.அக்கடிதங்கள் ஏற்படுத்தப் போகும் விளைவுகளை வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன் நன்கு அறிந்த காரணத்தால், அவரது சட்ட மூளை விழித்துக் கொண்டது.

அங்கிருந்த நடராஜனின் நண்பர் வி.ஜி.பி.சார்லசிடம், போலீசாரால் கைப்பற்றப்பட்ட அந்த ராஜினாமா கடிதங்களுக்கு போலீசார், 'சீசர் மகஜர்' தயார் செய்து கொடுத்த பின் தான், அவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற சட்ட நடைமுறை விளக்கத்தை, நடராஜன் வீட்டுக்கு வந்தவுடன் தெரிவிக்குமாறு சொல்லி, ஜெயலலிதாவிடம் விபரத்தை கூற, போயஸ் கார்டன் சென்று விட்டார்.சற்று நேரத்தில் நடராஜன், போலீசாரால் அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கிருந்த அவரது நண்பர் வி.ஜி.பி.சார்லஸ், வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன் வந்ததையும், அவர் கூறிய சட்ட நடவடிக்கை விளக்கத்தையும் கூறினார்.

அதை உடனடியாக புரிந்து கொண்ட நடராஜன், 'அக்கடிதங்களுக்கு 'சீசர் மகஜர்' தராமல் கைதாக மாட்டேன்' என்று அடம் பிடிக்கவும், வேறு வழியின்றி போலீசார், சீசர் மகஜர் வழங்கி விட்டு, ஜெயலலிதாவின் ராஜினாமா கடிதங்களை எடுத்துச் சென்றனர்.சீசர் மகஜர் தந்த விவகாரத்தை, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு தெரியப்படுத்தவில்லை.மேலிட உத்தரவின்படி, மிக துரிதமாக அக்கடிதங்கள், சபாநாயகர் தமிழ்க் குடிமகனிடம் சமர்ப்பிக்கப்பட்டன.சட்டப்படி தவறு

உடனடியாக தமிழ்க் குடிமகன், ஜெயலலிதாவிடம் நேரடியாக எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளாமல், அக்கடிதத்தின் அடிப்படையில், ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ., பதவி ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக அறிவித்தார்.அதற்கு மறுநாள், பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதா, வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன் தெரிவித்த சட்ட விளக்கத்தை, அப்படியே கூறினார்.

அதாவது, போலீசாரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை, 'சீலிட்டு' சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு தான் அனுப்ப வேண்டும். அப்படி செய்யாமல், நேரடியாக சபாநாயகருக்கு அனுப்பியது சட்டப்படி தவறு என்று கூறி, அன்றைய அரசை வெளுத்து வாங்கினார்.தவறை உணர்ந்த போலீசார், கடிதங்களை சபாநாயகரிடம் பெற்று, அவற்றை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அக்கடிதங்கள், வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களாக இன்றளவும் இருந்து வருகின்றன.

இவையெல்லாம் இன்றைய அ.தி.மு.க.,வினரால் அறியப்படாத உண்மைகள்.இவ்வாறு, முதல் கட்ட சட்ட போராட்டத்தில் வென்று வந்த ஜெயலலிதா, அடுத்த கட்ட சட்ட போராட்டத்தை சந்திக்க நேர்ந்தது.அது, அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும் என்று, அரசியல் விமர்சகர்களாலும் சட்ட நிபுணர்களாலும் கருத்து சொல்லப்பட்டது.அது தான் ஜெயலலிதா போட்டியிட்ட, போடிநாயக்கனுார் தேர்தல்.கடந்த 1988, டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, தி.மு.க., - காங்கிரஸ் - ஜானகி அணி வேட்பாளர்களை பெரும் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தமிழக சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயலலிதா.இந்த வெற்றியை எதிர்த்து, தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த முத்து மனோகரன் என்பவர், தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 43வது நாளில், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெயலலிதாவின் வெற்றி செல்லாது எனவும், தேர்தல் முடிவை ரத்து செய்யக் கோரியும் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது, ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன் ஆஜரானார். இவர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், அரசியலமைப்பு சட்டம், தேர்தல் தொடர்பான வழக்குகளை நடத்துவதில் அசாத்தியமான திறமை பெற்ற சட்ட நிபுணர்.இவர், ஏற்கனவே மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்காக வாதாடி, நீதிமன்றத்தில் பல்வேறு வெற்றிகளை தேடித் தந்தவர். தேர்தல் தொடர்பான வழக்குகளில், எடுத்த எடுப்பிலேயே எதிர் தரப்பினரை 'நாக் அவுட்' செய்வது தான் இவரது சிறப்பு அம்சம்.இவ்வழக்கில், தி.மு.க.,வின் வேட்பாளர் முத்து மனோகரன் சார்பாக மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன், கே.பி.சிவசுப்பிரமணியன் (பின்னாளில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி) ஆஜராகினர்.

தோல்வியுற்ற வேட்பாளர் முத்து மனோகரன் தாக்கல் செய்த வழக்கில், ஜெயலலிதாவும், அவரது தேர்தலில் ஏஜன்டுகளும், வாக்காளர்களுக்கு பணம், சேலை - வேட்டி வினியோகம் செய்தததற்கான ஆதாரங்கள்.மேலும் அப்போது அரசு ஊழியராக இருந்த சசிகலாவின் கணவர் நடராஜன், ஜெயலலிதாவிற்கு தேர்தல் வேலை செய்ததற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட்டிருந்தன.ஜெயலலிதா பெரியகுளம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வேட்பாளராக மனு தாக்கல் செய்த போது, அவருக்கு உறுதுணையாக இருந்து, அனைத்து சட்டரீதியான உதவிகளையும், வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன் செய்து கொடுத்தார்.

ஜெயலலிதாவிற்கு மாற்று வேட்பாளராக, போடிநாயக்கனுார் முன்னாள் எம்.எல்.ஏ., ராமதாஸ் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின், தன் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார்.ராமதாஸ் மீதும், வாக்காளர்களுக்கு பணம் வேட்டி, சேலை வினியோகம் செய்ததாக, முத்து மனோகரன் தன் தேர்தல் குற்றச்சாட்டுகளில் குறிப்பிட்டிருந்தார்.மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் - 1951ன்படி வாபஸ் பெற்ற மாற்று வேட்பாளர் மீது குற்றச்சாட்டுகள் மனுவில் கூறப்பட்டு இருக்கும் பட்சத்தில், அவரையும் ஒரு பிரதிவாதியாக கண்டிப்பாக சேர்த்திருக்க வேண்டும்.latest tamil newsவெற்றியை எதிர்த்து மனு

மேலும், இச்சட்டம் ஒரு வேட்பாளர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அதை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த நபர்களோ அல்லது வாக்காளர்களோ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து, 45 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் வேட்பாளரின் வெற்றியை எதிர்த்து மனு தாக்கல் செய்ய வேண்டும்.அந்த 45 நாட்களுக்கு பின், அவற்றை எல்லாம் களைய முடியாது. இந்த சட்ட நடைமுறைகளை மீறி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாமல், ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.ஆனால், முத்து மனோகரன் தாக்கல் செய்த மனுவில், வாபஸ் வாங்கிய போடி ராமதாஸ், பிரதிவாதியாக சேர்க்கப்படவில்லை.இந்த சட்ட விதிகளை, வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன் மேற்கோள் காட்டி, தன் வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில், 20க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி திறம்பட வாதிட்டார்.

ஆரம்பத்தில், நீதியரசர் ஜனார்த்தனன், ஜெயலலிதாவிற்கு எதிரான மனப்போக்கில் இருந்தார். ஆனால், இறுதியில் கே.சுப்பிரமணியன் வாதத்தை ஏற்று, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே தள்ளுபடி செய்தார்.இந்த சட்ட போராட்டத்திலும் வெற்றி பெற்ற ஜெயலலிதா, 1991ல் முதல்வர் ஆனார். வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

இக்கால கட்டத்தில் தான் ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஒரு சட்ட சிக்கலை சந்திக்க நேர்ந்தது.அது தான், 'ஜெயா பப்ளிகேஷன்' வழக்கு. சசிகலாவும், ஜெயலலிதாவும் சேர்ந்து ஜெயா பப்ளிகேஷன் என்ற நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்து வந்தனர்.தமிழ்நாடு பாடநுால் நிறுவனத்திற்கு பாட புத்தகங்கள் அச்சடித்து கொடுப்பதற்காக, 1988 - 1992 வரை மூன்று ஒப்பந்தங்களை செய்திருந்தனர். அதில் மூன்றாவது ஒப்பந்தம், 1991, நவ., 15 முதல், 1992 செப்., 30 வரை செய்யப்பட்டிருந்தது.

இதை அறிந்த சுப்ரமணிய சுவாமி, 1992 அக்., 2 அன்று தமிழக கவர்னரிடம், ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை பறிக்குமாறு மனு அளித்தார்.ஆனால், அப்போதைய கவர்னர் பீஷ்ம நாராயண சிங், அம்மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் சுப்ரமணிய சுவாமி, உச்ச நீதிமன்றத்தை அணுகினார். 1993 மார்ச் 27 அன்று, மனுவை அப்போதைய தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷனுக்கு தமிழக கவர்னர் அனுப்பி வைத்தார்.அப்போது, டில்லியில் சுப்பிரமணிய சுவாமி பற்றிய சில முக்கிய தகவல்களை வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன் திரட்டி இருந்தார்.அதன் அடிப்படையில், ஜெயலலிதா சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.என்.சேஷன் விசாரிக்க தடை கோரி, 'ரிட்' மனு ஒன்றை தாக்கல் செய்ய, வழக்கறிஞர் கே.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்தார்.

அம்மனுவில், 'டி.என்.சேஷன் ஒரு செய்தி நிறுவனம் மீது, 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், சுப்ரமணிய சுவாமியின் மனைவி ரக் ஷனா, சேஷனின் வழக்கறிஞராக இருப்பதால், மனுவை சேஷன் விசாரிக்க கூடாது.'இது இயற்கை நீதிக்கு முரணானது. ஒரு தலைப்பட்சமாக நடக்க வாய்ப்புள்ளது' என்று வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், டி.என்.சேஷன் விசாரிக்க இடைக்கால தடையும் வழங்கி, பின் வழக்கை முழுமையாக விசாரித்து, நிரந்தர தடையும் வழங்கியது.இவ்வாறு மூன்றாவது முறையாக சட்ட சிக்கல்களில் இருந்து ஜெயலலிதா விடுபட்டார்.
சிறை தண்டனை

அடுத்ததாக, ஜெயலலிதாவும், சசிகலாவும் சேர்ந்து, தமிழக அரசின், 'டான்சி' நிறுவன நிலத்தை வாங்கினர். இது சம்பந்தமான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது தான், அட்வகேட் ஜெனரலான சுப்பிரமணியனுக்கு தெரியவந்தது.உடனே அவர் ஜெயலலிதாவை சந்தித்து, 'நீங்கள் வாங்கிய டான்சி நிலம் உங்களுக்கு சட்ட பிரச்னை ஏற்படுத்தும். ஆகையால், உடனடியாக அந்த நிலத்தை அரசிடம் திருப்பி ஒப்படையுங்கள்' என ஆலோசனை வழங்கினார். முதலில் அதை ஏற்ற ஜெயலலிதா, பின் நிலத்தை ஒப்படைக்காமல் பின்வாங்கினார். அதில் நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின், நீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு, தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாமல், உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, டான்சி நிலத்தை அரசுக்கே மீண்டும் திருப்பி அளித்தார்.

நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை நடத்தி வந்த ஜெயலலிதா, கடைசியில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹாவால் சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, சில வாரங்களிலேயே உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும், உள்ளத்தாலும், உடலாலும் பாதிப்புக்கு ஆளானார்.ஜெயலலிதா தமிழக அரசியல் வானில் பேரொளியாய் தோன்றி, திடீரென நிழல் போல் மறைந்ததை, தமிழக மக்களால் இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை.ஆம்... இன்று, நீலக்கடலின் ஓரத்தில் தன் அரசியல் ஆசானுக்கு அருகில், தன் தொண்டர்களின் இதயத்தில் என்றும் நீங்கா இன்ப காவியமாய் இருந்து வருகிறார்; எப்போதும் இருந்து வருவார்!புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X