பொள்ளாச்சி: பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்த கறிக்கடை வியாபாரி யூனீஸ் மனைவி திவ்யபாரதி, 25. இவர், கடந்த, 27ம் தேதி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த, 29ம் தேதி சுக பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது.
தாய் மற்றும் குழந்தை இருவரும் சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றனர். இது குறித்து கிழக்கு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இரண்டு பெண்கள், குழந்தையை கடத்திக்கொண்டு கேரளா மாநிலம் பாலக்காடு கொடுவாயூர் கிராமத்துக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கடத்தலில் ஈடுபட்ட இருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. எஸ்.பி., பத்ரி நாராயணன் கூறுகையில், "பொள்ளாச்சி, கோவை, பாலக்காடு வரை கண்காணிப்பு கேமராக்கள் வைத்து குழந்தை கடத்தியவர்களை கண்டறிய முடிந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணைக்கு பின் முழு விபரம் தெரிவிக்கப்படும். பொது இடங்கள், வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அனைவரும் முன்வர வேண்டும்," என்றார்.