வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பொள்ளாச்சி: 'ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுத்து வலியுறுத்துவோம்,' என, ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பொள்ளாச்சி, ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.ஏ.பி., விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 27ம் தேதி பரம்பிக்குளம் - ஆழியாறு நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இத்தகவல் அரசுக்கு தெரிந்ததால், நகராட்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்கள் தலைமையில், கூட்டமைப்பினரிடம் கடந்த, 1ம் தேதி பேச்சு நடத்த அழைப்பு விடுத்தனர்.இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த, 1ம் தேதி அமைச்சர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில், 'பி.ஏ.பி., விவசாயிகள் சம்மதம் இல்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்,' என தெரிவித்ததாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், கூட்டமைப்பினர் கூட்டம் நேற்று, தொழில்வர்த்தக சபை கூட்ட அரங்கில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் தலைமை வகித்தார். தொழில்வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் செந்தில், பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நல சங்க செயலாளர் வித்யாசாகர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய என்ன செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் கூறியதாவது: அமைச்சர்கள் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தினால், பொள்ளாச்சி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.பிரச்னைகளை கேட்டறிந்தவர்கள், பொள்ளாச்சி மக்களை பாதிக்க வைத்து இத்திட்டம் நிறைவேற்ற மாட்டோம் என தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வரும், 15ம் தேதி பொள்ளாச்சி வரும் முதல்வரை, விவசாயிகள் கூட்டமைப்பினர் சந்தித்து மனு கொடுத்து, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.முதல்வரிடம் நேரம் கேட்டு, இத்திட்டத்தால் என்ன பிரச்னை ஏற்படும் என விரிவாக விளக்கலாம். தமிழக அரசு, பொள்ளாச்சி விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.