வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுவதும் தடை விதித்தும் மதுரையில் தடையின்றி தாராளமாக பயன்படுத்தி வருகின்றனர். அவற்றை கண்டபடி வீசி நீர்நிலைகளையும் நகரையும் மாசடைய செய்கின்றனர்.

சுற்றுச்சூழல், கடல் பகுதிக்கு தீமை விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க, விற்க, இருப்பு வைக்க ஜூலை 1 முதல் தடை விதிக்கப்பட்டது. இனி பிளாஸ்டிக் பலுான் ஸ்டிக்ஸ், சிகரெட் பேக்ஸ், பிளேட், கப், கிளாஸ், போர்க்ஸ், ஸ்பூன், கத்தி, ட்ரே, இயர்பட்ஸ், ஸ்வீட் பாக்ஸ் ரேப்பர், கேன்டி, ஐஸ்கிரீம் ஸ்டிக், ஸ்ட்டிரா, 100 மைக்ரான் கீழேயுள்ள பி.வி.சி., பேனர்ஸ், கேரி பேக்குகளை பயன்படுத்த கூடாது.
தேசிய, மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து இந்த பிளாஸ்டிக் பொருட்களை மாநிலங்களுக்குள் எடுத்து செல்வதை தடுக்க மத்திய அரசு தெரிவித்துள்ளது. என்னதான் தடை சட்டம் வந்தாலும் மதுரை மக்கள், தயாரிப்பாளர்கள், வியாபாரிகள் 'எங்கள் வழி தனி வழி' என்றே பயணிக்கின்றனர்.
அந்த வகையில் உணவுப் பாதுகாப்பு துறையின் தரச்சான்று பெற்ற தெப்பக்குளம் உட்பட நகரெங்கும் உள்ள உணவகங்களில் தடை செய்த பிளாஸ்டிக் ஸ்பூன்கள், ஸ்டிராக்கள், கப்புகள் தாரளமாக பயன்படுத்துகின்றனர். சூடான பானிபூரி முதல் சூப் வரை பிளாஸ்டிக் ஸ்பூன்களால் சாப்பிடுகின்றனர். சாப்பிட்ட பின் தெப்பக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் தெருக்களில் வீசி மாசு ஏற்படுத்துகின்றனர்.

உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு சுற்றுச்சூழலையும் சீரழிக்கிறார்கள். டீக் கடைகளில் பாலிதீன் பைகளில் சுடச்சுட பார்சல் தருவதையும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.மாவட்ட, மாநகராட்சி, உணவு பாதுகாப்பு துறை நிர்வாகங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.