மதுரை: தொழில் வளர்ச்சியில் மதுரை எப்போதும் பின்தங்கிய மாவட்டம் தான். இடம், போக்குவரத்து வசதிகளும் மனித வளம் என எல்லாம் இருந்தும், மாறி மாறி ஆட்சி செய்யும் அ.தி.மு.க., - தி.மு.க., அரசுகள் மதுரையைக் கண்டுகொள்வது இல்லை. கோவைக்கு தரும் முக்கியத்துவம் மதுரைக்கு தருவதில்லையே என ஆதங்கப்படுகின்றனர் தொழிலதிபர்கள். மதுரை வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை தொழிலதிபர்கள் வேண்டுகோளாக முன்வைத்துள்ளனர்.

நிதியமைச்சர் மனது வைக்க வேண்டும்
ஜெயபாலன், தொழில், பொருளாதார ஆராய்ச்சியாளர், கன்சோட்ரி, மதுரை: மதுரையில் ரூ.5000 கோடி முதலீட்டில் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்று அமைந்தால் அதைச் சார்ந்து ரூ.100 கோடி முதலீட்டில் 25 நடுத்தர தொழிற்சாலைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதன் மூலம் தொழிற்சங்கிலி வலுவடைந்து வேலை வாய்ப்புகள் பெருகும்.விருதுநகரில் டெக்ஸ்டைல் பூங்கா கொண்டுவருவதாக அமைச்சர் தங்கம்தென்னரசு சொன்னார். இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. நிறுவன தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பார்கள்.
அதை அறிக்கையாக்குவதற்குள் பேனல் அதிகாரிகள் இடமாற்றம் ஆகிவிடுவர். மீண்டும் கருத்து கேட்பு, அறிக்கை என தொடரும். பலன் மட்டும் இருக்காது.வெளிநாடுகளில் உள்ள தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு கைடன்ஸ் (டி.என்.கைடன்ஸ்) இருந்தது. முன்னாள் முதல்வர் பழனிசாமி காலத்தில் செயல்பட்டது.
தற்போது செயல்படவில்லை. தமிழகத்தை வளர்ந்த நாடாக இங்கிலாந்து, பிரான்ஸ், ஹெர்மனி, ஹாங்காங் உடன் தொழில்துறையில் ஒப்பிட வேண்டும். உத்தரபிரதேசத்துடன் நம்மை ஒப்பிடக்கூடாது. நிதியமைச்சர் தியாகராஜன் வெளிநாடுகளில் நிறைய தொடர்புடையவர். அவர் காலத்தில் தொழில்களை முன்னிறுத்தி ஆண்டுக்கு ஒரு நிறுவனமாக மதுரையில் நிறுவ வேண்டும்.
அரசின் மறுப்புக்கு காரணம் தெரியவில்லை
ரத்தினவேல், தலைவர், வேளாண் வர்த்தக சங்கம், மதுரை: ஒரு மாவட்டம் ஒரு விளைபொருள் என மத்திய அரசு அறிவித்து மதுரைக்கு பயறு வகைகள் என உத்தரவிட்டும் சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. காபி, ஏலக்காய், வாசனை பொருட்களைப் போல பயறு வாரியம் அமைக்கவேண்டும்.
மதுரையில் பயறு வகை உற்பத்தி மிகவும் குறைவு. முருங்கை ஏற்றுமதி மண்டலம் மதுரையை மையமாக கொண்டு 7 மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படும் என அரசு அறிவித்து இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.மல்லிகை, காய்கறி, பழங்கள் மதுரை, திண்டுக்கல், தேனி, ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருச்சி, கொச்சி, சென்னை விமானத்தில் கிழக்காசிய நாடுகளுக்கு செல்கிறது. மதுரைக்கு சர்வதேச விமானம் வருவதற்கு மத்தியஅரசு அனுமதி தரவில்லை. தமிழக அரசும் அதை வலியுறுத்தவில்லை. லாப நஷ்டம் அந்த நிறுவனத்தை சேர்ந்தது. சில்க், துபாய், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் மதுரைக்கு வர தயாராக இருந்தும் மத்திய, மாநில அரசுகள் மறுப்பதற்கான காரணம் புரியவில்லை.
மதுரையில் சர்வதேச விமான சேவை வந்தால் கார்கோ சர்வீஸ் அதிகரிக்கும். மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து செல்லும் பயணிகளும், சரக்குகளும் கொச்சி, திருச்சி, சென்னை கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு அங்கே கூடுதல் விமானங்கள் அனுப்பப்படுகின்றன.ஏற்றுமதிக்கு அரசு என்னதான் உதவி செய்கிறது. இங்கே உள்ள பொருட்களை பிற மாவட்ட, பிற மாநில ஏற்றுமதி கணக்கில் சேர்ப்பது எந்த விதத்தில் நியாயம்.

தனியாக நிலவங்கி தொடங்க வேண்டும்
எஸ்.அன்புராஜன், முன்னாள் தலைவர், தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கம், மதுரை: மதுரையில் தொழிற்சாலைக்கு தனியாக நிலவங்கி தொடங்க வேண்டும். இடம் தனியாக ஒதுக்கினால் தான் தொழிற்சாலைகள் வளரும். கோவைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மதுரைக்கு அரசு தருவதில்லை. மத்திய பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் இருந்தபோது 'டிபன்ஸ் காரிடாரில்' மதுரையை சேர்க்கவில்லை. இன்ஜினியரிங், துணி, உணவு, பார்மா என கணக்கற்ற வகையில் ராணுவத் துறை மூலம் வாங்குகின்றனர்.
மதுரை மடீட்சியாவில் இருந்து அணுகிய போது கூட திருச்சியுடன் சேர்ந்து செய்யுங்கள் என்று சொன்னாரே தவிர மதுரை வரை திட்டத்தை விரிவாக்கம் செய்யவில்லை. மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு 'டிபன்ஸ் இன்டஸ்ட்ரியல் கிளாத்' கொடுக்க கேட்டிருந்தோம். மதுரைக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
கார் தொழிற்சாலைகள் சென்னை, சென்னையை ஒட்டியே அமைக்கின்றனர். இங்கு நிலத்தின் மதிப்பும்அதிகமாக உள்ளது. ஆனால் வளர்ச்சியை எதிர்பார்த்து சிறு, குறுந்தொழில் செய்பவர்கள் சென்னைக்கே செல்கின்றனர். மதுரையை சுற்றி அரசு இடங்கள் நிறைய உள்ளன. மதுரையை சுற்றி பெரிய தொழிற்சாலைகள் உருவாக்க அரசு உதவினால் பல 'ஆன்சிலரி யூனிட்'டுகள் புதிதாக வரும். தென்மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். பொறியியல் பட்டதாரிகள் இங்கிருந்து சென்னை செல்கின்றனர். இங்கே தொழில்கள்வளர்ந்தால் வேலை வாய்ப்பு கிடைப்பதோடு இளைஞர்கள் புலம்பெயர்வதும் குறையும்.
பொழுதுபோக்கு பூங்கா தேவை
இளங்கோவன், மாநில தலைவர், கிரெடாய் அமைப்பு, மதுரை: வடஇந்தியர்கள் கட்டாயம் ராமேஸ்வரம் வருகின்றனர். 5 ஆண்டுகளுக்குமுன் வரை ராமேஸ்வரம் செல்வதற்கு விமானம், ரயில் மூலம் மதுரை வழியாக செல்ல வேண்டும். அங்கு தங்கும் விடுதி இல்லை. தற்போது ரயிலில் வருபவர்கள் சென்னையிலிருந்து நேராக ராமேஸ்வரம் செல்கின்றனர். விமானத்தில் வருபவர்கள் மதுரைக்கு வெளியே சென்று ராமேஸ்வரம் போகின்றனர்.
வெளிநாட்டு வெளிமாநில பயணிகள் மதுரை வருவது கடந்த 5 ஆண்டுகளாக குறைந்துள்ளது. மதுரைக்கு என்று வருபவர்களும் மதுரை மீனாட்சியம்மனை தரிசித்த கையோடு கேரளா சென்று விடுகின்றனர்.மதுரையை மையப்படுத்தியபொழுதுபோக்கு அமைக்க வேண்டும். அதன் மூலமே மதுரையின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.
ஓட்டல், உணவுத்துறை வளர்ச்சி அடையும். மத்திய சிறைச்சாலையை அரசு வெளியே கொண்டு செல்ல நினைத்தால் அந்த இடத்தில் அரசே நிரந்தர பொழுதுபோக்கு பூங்கா அமைக்கலாம். பி.ஓ.ஓ.டி. அதாவது 'பில்ட் ஆப் ஓன் ஆப்பரேட் டிரான்ஸ்பர்' முறையில் வெளிநாட்டு முதலீட்டுகளை கவர்ந்திழுத்து பூங்கா அமைக்க வைக்கலாம். அரசு இடம் ஒதுக்கினால் போதும். இங்கிருந்து எந்த பொருளை உற்பத்தி செய்தாலும் சந்தைப்படுத்தினாலும் சுற்றுலா பயணிகளை வாங்க வைக்கலாம்.
ஜாதிய பிரச்னையை தீர்க்க தொழில்கள் அவசியம்
ராமசாமி, அகில இந்திய பேக்கரி உற்பத்தியாளர் சங்க பொருளாளர், மதுரை: மதுரை விவசாய பூமியாகஇருந்தது. ஹார்வி மில் வந்தபின்பே தொழிற்சாலை உருவானது. டி.வி.எஸ். தியாகராஜர் மில்களுக்கு அடுத்து வேறெந்த புதிய தொழிற்சாலைகளும் வரவில்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்காக நிறைய மெனக்கெடுகின்றனர்.
கொங்கு மண்டலத்தை போல அரசியல்வாதி, எம்.எல்.ஏ.,க்களின் 'பொலிடிக்கல் லாபி' இங்கில்லை. தென்மாவட்டங்களில் தொழில்கள் வளராததற்கு இதுவும் காரணம். மதுரையில் நுாற்பாலைகள் மூடப்பட்டாலும் அருகேயும், நத்தத்தை சுற்றியும் 2000 ஆயத்த ஆடை யூனிட்கள் உள்ளன. எனவே ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு கவச ஆடைகள் தயாரிக்கும் யூனிட் இங்கு அமைக்கலாம். தென்தமிழகத்தில் தொழில்கள் வளர்ச்சி அடைந்தால் ஜாதியப் பார்வையும், ஜாதிய பிரச்னையையும் வேரறுக்கப்படும்.எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை.