வேலுார்: வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலுார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது வேலுார் சத்துவாச்சாரியை சேர்ந்த வக்கீல் வெங்கடேசன் குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் மனு கொடுக்க வந்தனர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து எட்டு பேரும் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில், வெங்கடேசன், 60, அவரது சகோதரர்கள் பாபு, 57, காமராஜ், 55, முரளிதரன், 50, மற்றும் பாபுவின் மனைவி மகேஸ்வரி, 50, காமராஜின் மனைவி அருள் மொழி, 45, முரளிதரனின் மனைவி சாந்தி, 40, வெங்கடேசனின் அக்கா செல்வம், 57, என்பதும் இவர்களுக்கு சொந்தமாக வேலுார் காந்திசாலையில் உள்ள 800 சதுர அடி காலிமனையை சிலர் ஆக்கரமித்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இது குறித்த வழக்கு நடந்து வருகிறது. ஆக்கிரமித்தவர்கள் வழக்கை வாபஸ் பெறும்படி 20 அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். வேலுார் வடக்கு போலீஸ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவர்களை அழைத்து மனுவை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.