அ.தி.மு.க., பொதுக்குழு நடத்த...நீங்கியது தடை!: உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

Updated : ஜூலை 06, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை:அ.தி.மு.க., பொதுக்குழு விவகாரத்தில் தலையிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டுள்ளதால், வரும் ௧௧ல், அறிவித்தபடி பொதுக்குழு நடக்கும் என, பழனிசாமி தரப்பினர் தெரிவித்தனர். கடந்த மாதம் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க., விதிகளில் திருத்தம் மேற்கொள்ள
அ.தி.மு.க., பொதுக்குழு நடத்த...நீங்கியது தடை!: உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி

சென்னை:அ.தி.மு.க., பொதுக்குழு விவகாரத்தில் தலையிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் தடை விதிக்கப்படாததுடன், பச்சைக் கொடியும் காட்டப்பட்டுள்ளதால், வரும் ௧௧ல், அறிவித்தபடி பொதுக்குழு நடக்கும் என, பழனிசாமி தரப்பினர் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க., விதிகளில் திருத்தம் மேற்கொள்ள தடை கோரி, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினரான சண்முகம் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


பின்பற்றவில்லை
இதை விசாரித்த நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு, 'வரைவு தீர்மானங்கள் 23 தவிர்த்து, புதிதாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது; பொதுக்குழுவில் எந்த பொருள் குறித்தும் விவாதிக்கலாம்; ஆனால், அதுகுறித்து முடிவெடுக்கக் கூடாது' என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, 23ம் தேதி பொதுக்குழு கூடியது. அதில், 23 தீர்மானங்களையும் ரத்து செய்வதாகவும், கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஜூலை 11ல் பொதுக்குழு கூடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த மனு:அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 23 வரைவு தீர்மானங்களில், அவைத் தலைவர் நியமனம் குறித்து, எந்த தீர்மானமும் இல்லை. அவைத் தலைவர் என்ற முறையில், பொதுக்குழுவில் அறிமுகப்படுத்திய தீர்மானத்தை ஏற்று, ஜூலை 11ல் மீண்டும் பொதுக்குழு கூட்ட முடிவு செய்திருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, தமிழ்மகன் உசேன், ஜெயகுமார், சீனிவாசன் ஆகியோர் பின்பற்றவில்லை. எனவே, கடந்த மாதம் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும்; அவைத் தலைவராக செயல்படவும் தடை விதிக்க வேண்டும்.வரும் 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்த, தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதவர்களை, அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.


உத்தரவை மீறிய செயல்
மனுதாரரான சண்முகம் சார்பில், வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி, ''வரைவு தீர்மானங்களை நிராகரித்து விட்டு, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தும், ஜூலை 11ல் பொதுக்குழுவை கூட்டுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றியது, நீதிமன்ற உத்தரவை மீறியது போலாகும்,'' என்றார்.
ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் சார்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, ''தற்காலிக அவைத் தலைவராக மட்டுமே தமிழ்மகன் உசேன், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டார். ''அவரை, நிரந்தர அவைத் தலைவராக நியமிக்க, பழனிசாமி முன்மொழிந்து, ஜெயகுமார் வழிமொழிந்தது, நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்,'' என்றார்.
இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''இந்த வழக்கு,விசாரணைக்கு ஏற்புடையது தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்,'' என்றார். அப்போது நீதிபதிகள், 'வரைவு தீர்மானங்கள் தவிர்த்து வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என்ற உத்தரவு, ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும். 'அதைத் தொடர்ந்து நடக்கும் பொதுக்குழு கூட்டங்களுக்கு அல்ல.

வரும் 11ம் தேதி பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும்படி, இந்த மனுவில் கோர முடியாது. 11ம் தேதி பொதுக்குழுவைப் பொறுத்தவரை, நாங்கள் தலையிட முடியாது' என்றனர்.மேலும், 'உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, விசாரணைக்கு எடுக்கப்பட்டு விட்டால், இந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும்?' எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, விசாரணையை, வரும் 7ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ஜூன் 23ல் பொதுக் குழுவில் நடந்த நிகழ்வுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர்.வரும் 11ம் தேதி பொதுக்குழு விஷயத்தில் தலையிட மறுத்ததுடன், தடை விதிக்கவும் முடியாது என, உயர் நீதிமன்றம் பச்சைக் கொடி காட்டி விட்டதால், ஏற்கனவே அறிவித்தபடி பொதுக்குழு நடக்கும் என பழனிசாமி ஆதரவாளர்கள் உறுதிபட தெரிவித்தனர்.


பதிலளிக்க பழனிசாமிக்கு உத்தரவு

அ.தி.மு.க., பொதுக் குழுவுக்கு தடை கோரிய மனுவுக்கு, பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் நாளைக்குள் பதிலளிக்க, சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், வரும் 11ம் தேதி நடக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்டம், ஆவிலிபட்டியைச் சேர்ந்த எஸ்.சூரியமூர்த்தி என்பவர், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு நீதிபதி தாமோதரன் முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'எதிர்மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்களை மனுதாரர் அறிந்து கொள்ளும் வகையில், தமிழில் மொழிபெயர்த்து தாக்கல் செய்ய, இந்த நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. 'எங்கள் தரப்பு பதில் மனு, ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய, மூன்று வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும்' என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்தார். நாளை, எதிர்மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.



சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதல்வரான பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் விடுமுறை கால அமர்வு நீதிபதியான இந்திரா பானர்ஜியிடம், பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், இந்த மனுவை தாக்கல் செய்தார்.

அப்போது அவர், ''அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்ட ஒரு வார அவகாசமே உள்ளதால், இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்தார். இதற்கு, பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 'பொதுக்குழு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு மீறப்பட்டது குறித்த அவமதிப்பு வழக்குகள் உள்ளதால், பழனிசாமி மனுவை அவசர வழக்காக விசாரிக்க தேவையில்லை' என, அவர் வாதிட்டார்.இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அமர்வு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது.



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
08-ஜூலை-202209:25:50 IST Report Abuse
ravi பதவிவெறி பிடிச்சி பைத்தியமா திரிகிறார்.
Rate this:
Cancel
VIDHURAN - chennai,இந்தியா
05-ஜூலை-202221:33:48 IST Report Abuse
VIDHURAN கோர்ட் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் பழனிச்சாமியோ பன்னீர்செல்வமோ இருவரும் கட்சியை ஒருவழியாக்கிவிட்டனர். எம் ஜி ஆர் மறைந்தபோதும், பின்பு ஜெயலலிதா மறைந்த போதும் கட்சி உடைந்து பிறகு வளர்ந்தது. ஆனால் அவர்களை போல இந்த தலைவர்களுக்கு ஆளுமையும் இல்லை தன்னம்பிக்கையும் இல்லை.பாவம் எம் ஜி ஆரின் தொண்டர்கள்.ஒரு விதமான ஆறுதல் என்னவென்றால் எம்ஜிஆர் என்ற மேஜிக் வார்த்தையை கொண்டு வளர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் முதியவர்களாகிவிட்டு இருப்பார்கள். எம்ஜிஆர் இறந்து முப்பது வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டபடியால், பிற்காலத்தில் கட்சிக்கு வந்த இளைஞர்களிடம் பெரிய ஈர்ப்பை வளர்க்க ஒருவரும் கண்ணுக்கு எட்டிய வரையில் இல்லாததால் பாவம் அதிமுக.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
05-ஜூலை-202209:08:20 IST Report Abuse
duruvasar திமுகவின் வழகறிகர் அணி மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று என நிறைய பேர் கூற கேட்டிருக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X