கோபன்ஹேகன்-டென்மார்க்கில் 'சூப்பர் மார்க்கெட்'டில் புகுந்த ஒருவர் அங்கிருந்தோரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் மூவர் உயிர் இழந்தனர்; நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
ஐரோப்பிய நாடான டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் அருகே 'பீல்ட்ஸ்' என்ற வணிக வளாகம் இயங்கி வருகிறது. இங்கு வாடிக்கையாளர் போல புகுந்த ஒருவர், சரமாரியாக சுட்டார். இதையடுத்து பொருட்கள் வாங்க வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.பல கடைகள், வாடிக்கை யாளர்களை காப்பாற்ற இழுத்து மூடப்பட்டன. தகவல் அறிந்து வந்த போலீசார், வணிக வளாகத்தை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்தனர். இந்த தாக்குதலில் மூவர் உயிர் இழந்தனர்; நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.
துப்பாக்கியால் சுட்டவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் டென்மார்க் பூர்வகுடியைச் சேர்ந்தவர் என்றும், துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் விசாரணையில் தெரியவரும் என்றும், போலீசார் கூறினர்.துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக டென்மார்க் இளவரசர் பிரெட்ரிக், சைக்கிள் போட்டி தொடர்பான வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்தார். கடந்த வாரம், டென்மார்க் அருகேயுள்ள நார்வேயில், ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், ஓரினச்சேர்க்கையாளர் விழாவில் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.