வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராமேஸ்வரம்,--ஆசியாவிலேயே முதன் முறையாக அமைக்கப்பட்ட, 'லிப்ட்' வடிவிலான துாக்கு பாலத்துடன், ராமேஸ்வரம் பாம்பன் கடலில் அமைக்கப்படும் பிரமாண்ட ரயில் பாலம், 2023 மார்ச்சில் திறக்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் கடலில், 1914ல் அமைத்த ரயில் பாலம், நடுவே உள்ள துாக்கு பாலம் பலமிழந்து வருவதால், 250 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த, 2019 நவ., 8ல் பாம்பனில் பூமி பூஜையுடன் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியது. கொரோனா ஊரடங்கால் கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில்,
தற்போது கடலில், 20 மீட்டர் இடைவெளியில், 101 துாண்கள் அமைக்கும் பணி முடிந்தது.பாம்பன் கடலில், 2.075 கி.மீ.,க்கு ஆசியாவிலேயே அமையும் புதிய ரயில் பாலம் இது தான். இப்பாலத்தின் நடுவில், ஸ்பெயின் நாட்டு நிறுவனம் வடிவமைத்த லிப்ட் முறையிலான துாக்கு பாலம் அமைகிறது. இது மேலே சென்று திறந்தும், மீண்டும் கீழே இறங்கி மூடும் வகையில் அமைய உள்ளது.இதுபோன்ற லிப்ட் வடிவ துாக்கு பாலம், உலகில் அமெரிக்கா, பிரான்ஸ்க்கு அடுத்தபடியாக பாம்பனில் மட்டுமே உள்ளது.
இந்த துாக்கு பாலம், 72.5 மீட்டர் நீளம், 500 டன் எடை கொண்டது.பாலத்தை கப்பல், படகுகள் கடந்து செல்ல, லிப்ட் துாக்கு பாலம் கடல் மட்டத்தில் இருந்து, 22 மீட்டர் மேலே சென்று திறந்து விடும். இந்த பாலத்தின் இரும்பு கர்டர்களை, ராமநாதபுரம் சத்திரக்குடியில் ரயில்வே ஊழியர்கள் இணைத்து வருகின்றனர்.தற்போதைய துாக்கு பாலத்தை திறந்து மூடுவதால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, புதிய துாக்கு பாலத்தை ஹைட்ராலிக் முறையில் திறந்து மூட உள்ளனர்.
இதற்காக பாலம் நடுவில் கடலுக்குள், இரண்டு மாடி கட்டடத்தில் ஆப்பரேட்டர் அறைகள் அமைக்கின்றனர்.புதிய ரயில் பாலப்பணி அடுத்தாண்டு மார்ச்சில் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக, ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர்.