தஞ்சாவூர்-'கஜா' புயலில் வீடு சேதமடைந்து, சிரமப்பட்டு வந்த மாணவர் குடும்பத்துக்கு, தஞ்சாவூர் கலெக்டர் முயற்சியில், புதிய வீடு கட்டித் தரப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி, 47; இவரது கணவர் இறந்து விட்டார். இவரது மகன் வேல்முருகன், 17; பிளஸ் 2 முடித்து, மேற்படிப்புக்காக, தஞ்சாவூரில் உள்ள அரசு கல்லுாரியில் விண்ணப்பித்துள்ளார்.கடந்த, 2018ம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலில், இவர்கள் வசித்த கூரை வீடு முற்றிலும் சேதமடைந்தது. தொடர் மழையால், கூரை வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது
.குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்திய தமிழ்செல்வி, சேதமான வீட்டிலேயே மகன் வேல்முருகன் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார்.கடந்த ஆண்டு, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் மொபைல் போன் எண்ணுக்கு, மாணவர் வேல்முருகன், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக தன் கஷ்ட நிலையை தெரிவித்தார்.இதையடுத்து, மாணவரின் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்த கலெக்டர், அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பசுமை வீடு கட்டும் திட்டத்துக்கு, மாணவரை விண்ணப்பிக்க வைத்தார்.
அதன்படி, வீடு கட்டும் ஆணை பெற்று, அரசு சார்பில் மானியமாக, 1.80 லட்சம் ரூபாய் கிடைத்தது. கூடுதல் தொகை தேவைப்பட்டதால், தொண்டு நிறுவனத்திடம் தெரிவித்து கலெக்டர் ஏற்பாடு செய்தார். இரண்டு மாதத்தில் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, மாணவர் வேல்முருகன் குடும்பத்தினரிடம் புதிய வீட்டை கலெக்டர் ஒப்படைத்தார். ஏழை குடும்பத்தினர், கலெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.