மதுரை : கொசுக்களை உற்பத்தி செய்யும் திறந்தவெளி சாக்கடை, ஜல்லி கற்கள் சிதறிய ரோடு, இருளைவிரட்டாத ஒளி குறைந்த மின் விளக்குகள், கடிக்க பாயும் வெறி நாய்கள் என பல பிரச்னைகளுக்குள் மூழ்கி தவிக்கிறார்கள் மதுரை மாநகராட்சி 9வது வார்டு உத்தங்குடி மக்கள்.விரிவாக்க பகுதிகளிலேயே பின்தங்கி இருப்பது உத்தங்குடி தான்.
உயர்நீதிமன்றம் மதுரை கிளை அருகில் இருந்தும் இப்பகுதி முன்னேறவில்லை. குடியிருப்புகளை கடந்து செல்லும் பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கும் போதெல்லாம் தெருவில் குளம் போல நீர் தேங்கிவிடும். அது கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. வீட்டுகுடிநீர் குழாய்களில் மோட்டார் மூலம் நீர் உறிஞ்சும் சம்பவமும் நடக்கிறது.
தடதட ஜல்லி ரோடுகள்
பசுபதி, ராஜிவ்காந்தி நகர்: மாநகராட்சி தேர்தலுக்கு முன் ரோடு அமைக்க ஜல்லி பரப்பினர். ஆனால், இதுவரை தார் ரோடு அமைக்கவில்லை. வாகனங்களில் தடதடவென தட்டு தடுமாறி தள்ளாடி தான் பயணிக்கிறோம். தெருவில் குழந்தைகளை நம்பி விளையாட முடியவில்லை. அந்த அளவிற்கு நாய் தொல்லை அதிகமாக இருக்கிறது.
நீரில் மிதக்கும் வீடுகள்
ஜனநாயகன், கிளாசிக் பார்க்: வீட்டின் அருகேயுள்ள பாசன கால்வாய் முதல் உயர்நீதிமன்றம் பின் உள்ள கண்மாய் வரை வரத்து கால்வாய் கட்ட துவங்கினர். அதை கட்டி முழுமையாக கட்டாமல் பாதியில் நிறுத்தி விட்டனர். இதனால் கால்வாயில் நீர் வரும் போது, மழை காலங்களில் வீடுகளை சுற்றி குளம் போல் நீர் தேங்குகிறது. பொதுப்பணித்துறை, மாநகராட்சி தீர்வு காண வேண்டும்.
புதிய ரோடுகள் அமைக்கப்படும்
கவுன்சிலர் தனராஜ் (தி.மு.க.,): ராஜிவ்காந்தி நகர் உட்பட சில தெருக்களில் பள்ளம் மேடு சரி செய்ய ஜல்லி பரப்பினோம்.அத்தியாவசிய தேவை பட்டியலில் வளர்நகர், உத்தங்குடி டூ பாண்டிகோயில் வரை ரோடு அமைக்கிறோம். மயானத்தில் குளியல் தொட்டி, அழ்குழாய் அமைக்கப்படும்.எம்.எல்.ஏ., நிதியில் உலகனேரி மயானத்தில் சீரமைப்பு பணி நடக்கிறது. பாதாள சாக்கடை, அங்கன்வாடி கட்டப்படும்.வீடுகளை சுற்றி பாசன கால்வாய் நீர் தேங்காமல் தடுக்கப்படும் என்றார்.