கடப்பாக்கம் : ''தமிழகத்தில் ஊரடங்குக்கு அவசியம் இல்லை,'' என, செங்கல்பட்டு அருகே நடந்த ஆய்வின்போது, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம்,
இந்நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தார்.இங்குள்ள மருத்துவ வசதிகள், ரத்தப் பரிசோதனை, ஆம்புலன்ஸ் வசதி மற்றும் மகப்பேறு மருத்துவர்களின் விபரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.அப்போது, அமைச்சர் கூறியதாவது:நாட்டில் தமிழகம், டில்லி, மும்பை, கேரளா உட்பட 10 மாநிலங்களில், கொரானா பாதிப்பு எண்ணிக்கை 1,000 முதல் 5,000 வரை ஆகிறது.நேற்று முன்தின நிலவரப்படி, தமிழகத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 95 சதவீதம் பேர் வீட்டிலும், 5 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையிலும் உள்ளனர்.தமிழகத்தில் கொரானா தொற்று அதிகமாக பரவும் சென்னை, செங்கல்பட்டு, கோவை போன்ற மாவட்டங்களில், கொரானா தடுப்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்படும். வரும் 10ம் தேதி 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 40 சதவீதம் பேர் மருத்துவமனையில் இருந்தால், ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் 5 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா தொற்றால் மருத்துவமனையில் உள்ளனர். அதனால், ஊரடங்கு அவசியம் இல்லை.கடப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மூன்று பொது மருத்துவர்கள் மற்றும் மகப்பேறு சேவை மருத்துவர்கள் பணியிடம் உடனடியாக நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.