சென்னை : விடுமுறை நாட்களில், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள வெளி வட்டச்சாலையில் நடக்கும் 'பைக் ரேஸ்'களால், பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்து அபாயம் நிலவுவதாக, வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்டச்சாலையில், சென்னை மற்றும் எண்ணுார், காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் பயணிக்கின்றன.
தவிர, கார்கள், இருசக்கர வாகன போக்கு வரத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இச்சாலையில், வார விடுமுறை நாட்களில் ரேஸ் ரோமியோக்கள் சிலர், 'பைக், ஆட்டோ ரேஸ்' நடத்துவது அதிகரித்துள்ளது.ரேஸ் நடக்கும் சமயத்தில், அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
இதனிடையே, பூந்தமல்லி சுங்கச்சாவடி அருகே நேற்று, பழைய பைக்குகளின் அணிவகுப்பு நடந்தது. இதில் பங்கேற்றோர், தங்கள் பைக்குகளை வேகமாக இயக்கினர். மீஞ்சூர் அருகே உள்ள சுங்கச்சாவடி அருகேயும், பலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இந்த சாகசங்களை மொபைல் போன்களில் படம் பிடித்து, அவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.
இதுபோன்ற அபாயகரமான செயல்களால், சாதாரண பொதுமக்கள் விபத்தில் சிக்கி, உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக, பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுபோன்ற அபாயகரமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, போக்குவரத்து காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.