வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நத்தம் : திண்டுக்கல் மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என கூறி வியாபாரிகள், பஸ் நடத்துனர்கள், பெட்ரோல் பங்க்குகள் என பலரும் வாங்க மறுப்பதால் அப்பாவி மக்கள் பரிதவிக்கின்றனர். இதனை ஒழுங்குப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.
2016 ல் மத்திய அரசால் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது , ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கு மாற்றாக புதிய ரூ. 2000 நோட்டுகள் ,ரூ.500 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. பண புழக்கத்தினை அதிகரிப்பதற்காக புதிய வடிவிலான ரூ.10, ரூ.20, ரூ.50,ரூ.100,ரூ.200 நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நேரத்தில் சிலர் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என தவறான வதந்தியை பரப்பினர்.
இந்த தவறான வதந்தியால் வியாபாரிகள் ,பஸ் நடத்துனர்கள் என பலரும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தனர். இதனைத் தொடர்ந்து அரசு , வங்கி அதிகாரிகள் அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என தெரிவித்து வந்தனர். இதனால் மற்ற மாவட்டங்களில் இந்த நாணயத்தை பயன்படுத்த தொடங்கினர்.

ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து பொருட்கள் வாங்கும் போதும், பஸ் பயணங்களின் போதும் நாணயத்தை வாங்க மறுருப்பதால் வாக்குவாதம் நடப்பது தொடர்கிறது. 10 ரூபாய் நாணயம் குறித்த தவறான வதந்தியாலும், அறியாமையாலும் பொதுமக்கள் பலர் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் பத்து ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் ஆகிறது.இதற்கு மாவட்ட நிர்வாகம் வழி காண வேண்டும்.
எடுத்து கூறலாமே
10 ரூபாய் நாணயம் செல்லாது என தவறான வதந்தியை சிலர் பரப்பியதன் விளைவாகவும், தவறான புரிதலாலும் பெரும்பாலானோர் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் இப் பிரச்னை உள்ளது. இதுபோன்ற வதந்தியை பரப்புவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ரூபாய் நாணயம் குறித்து வியாபாரிகள், நடத்துனர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தயக்கம் இன்றி பயன்படுத்தலாம் என வங்கிகள், மாவட்ட நிர்வாகம் எடுத்து கூற வேண்டும்.
- ஆர்.ஹரிஹரன், மாவட்ட அ.தி.மு.க., வர்த்தக அணி பொருளாளர்,நத்தம்.