கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் பெறும் பணி நேற்று துவங்கியது.கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் துவக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெறும் பணி, கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது.
இதையொட்டி, காலி பணியிட விபரம் குறித்த நோட்டீஸ் கல்வி மாவட்ட அலுவலத்தில் ஒட்டப்பட்டிருந்தது.விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட விபரங்களை இணைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று வழங்கினர்.
டி.டி.எட்., படித்தவர்கள் துவக்க பள்ளிக்கும், பி.எட்., படித்தவர்கள் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரிகளுடன் பி.எட்., மற்றும் எம்.எட்., படித்தவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கும் விண்ணப்பித்தனர்.ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்காலிக ஆசிரியர் பணியில் முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், நாளை 6ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.