வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆனைமலை: கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையத்தினர், 'உழவன்' செயலியில் வானிலை அறிக்கை வெளியிடாமல் உள்ளதால், விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
தமிழக அரசு, 'டிஜிட்டல்' வாயிலாக விவசாயிகளுக்கு உதவ, வேளாண் துறை சார்பில், 2018 ஏப்., மாதம் 'உழவன்' செயலி வெளியிட்டது. தற்போது, பல்வேறு அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டு, பயிர் காப்பீடு, மானிய திட்டங்களுக்கு பதிவு செய்வது, வானிலை அறிக்கை, வேளாண் செய்திகள் என, பல வசதிகள் மற்றும் தகவல்கள் வெளியிடப்படுகிறது.

இதில், அடுத்த, ஏழு நாட்களுக்கான வானிலை அறிக்கை, எதிர்பார்க்கப்படும் மழை அளவு, காற்றின் திசை மற்றும் வேகம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் என பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டு வந்தன.கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தகவல்கள், 90 சதவீதத்துக்கு மேல் துல்லியமாக உள்ளதால், பெரும்பாலான விவசாயிகள் இதை பயன்படுத்தி, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்படுத்துவது, பயிர் பாதுகாப்பு மற்றும் விதைப்பு செய்து வந்தனர்.
கடந்த, 15 நாட்களாக கோவை மாவட்டத்துக்குட்பட்ட ஒன்றியங்களுக்கான மழை முன்னறிவிப்பு முறையாக வெளியிடப்படுவதில்லை. இதனால், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கோவை வேளாண் பல்கலை மற்றும் வேளாண்துறையினர் விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.