வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஏரிகளில் விடப்படுகிறதா என்பதை கண்டறிய, அம்பத்துார் தொழிற்பேட்டை தொழிற்சாலைகளை கண்காணிக்குமாறு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'கழிவு நிர் கலப்பதாலும், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதாலும், கொரட்டூர் ஏரி மாசுபடுவதை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளில் இருந்து ஏரியை பாதுகாக்க வேண்டும்' என, கொரட்டூர் மக்கள் நல விழிப்புணர்வு அறக்கட்டளை நிறுவனர் சேகரன், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த, பசுமை தீர்ப்பாய நீதிபதி கே.ராமகிருஷ்ணன், நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவு:கொரட்டூர் ஏரியில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதை தடுக்க, அம்பத்துார் பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பையும், தேவையான சுத்திகரிப்பு நிலையங்களையும் அமைக்க, சென்னை, ஆவடி மாநகராட்சிகள், குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஆலோசித்து, குறுகிய கால, நீண்ட கால திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.கொரட்டூர் ஏரியை அவ்வப்போது துார்வார, நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பதை சென்னை, திருவள்ளூர் கலெக்டர்களுடன் இணைந்து, நீர்வளத்துறை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வருவாய்த்துறை ஆவணங்களின்படி, அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் கண்டறியப்பட்டால், அவற்றை அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.சென்னை, ஆவடி மாநகராட்சிகளில், லாரிகள் வாயிலாக கழிவுநீர் கொண்டு செல்வதை ஒழுங்குப்படுத்த வேண்டும். தவறு செய்வோரின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். கொரட்டூர், அம்பத்தூர் ஏரிகளை சுற்றி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நீர்நிலைகளில் விடப்படுகிறதா என்பதை கண்டறிய, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மாசு கட்டுப்பாட்டு வாரியமும், சிட்கோ நிர்வாக இயக்குநரும் கண்காணிக்க வேண்டும்.

குறைகள் கண்டறியப்பட்டால் காரணமானோர் மீது சுற்றுச்சூழல் இழப்பீடு வித்தில் உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.கொரட்டூர் ஏரியை பாதுகாப்பது தொடர்பாக, தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை செயல்படுத்த, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும், தலைமைச் செயலர் ஆய்வுக்கூட்டங்களை நடத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மாசுபாட்டை தடுக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.