புதுக்கோட்டை:புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவியின் செயல்பாடுகள் குறித்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின், ஏழாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில், 'கனவு மெய்ப்படும்' என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 18; பி.ஏ., வரலாறு படிக்கிறார். புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் -1 படித்த போது, அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிட தேர்வு செய்யப்பட்டார்.
அதற்கு உதவ முன் வந்த கிராமலாயா என்ற தொண்டு நிறுவனத்திடம், 'கிராம மக்கள் பலர் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால், வீட்டுக்கு ஒரு தனி நபர் கழிப்பறை கட்டிக் கொடுங்கள்' என்று கூறினார். இதையடுத்து, கிராமலாயா தொண்டு நிறுவனம், 126 வீடுகளுக்கு கழிப்பறை கட்டி கொடுத்ததால், அதற்கு காரணமான மாணவியை பலரும் பாராட்டினர்.
மாணவி ஜெயலட்சுமியின் செயல் குறித்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின், ஏழாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், 'கனவு மெய்ப்படும்' என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றுள்ளது. இதை, சிவா என்பவர் எழுதியுள்ளார். பாடம் வெளியானதற்கு மாணவி ஜெயலட்சுமி நன்றி தெரிவித்துள்ளார்.