கடலுார் : ஓய்வூதியம் பெறும் அமைப்புசாரா தொழிலாளர்கள், இணைய வழியில் ஆயுள் சான்று சமர்ப்பிக்கலாம் என, கடலுார் தொழிலாளர் உதவி ஆணையர் ராமு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையின் கீழ், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
அதில், பதிவு பெற்று 60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் ஆயுள் சான்று சமர்ப்பித்த பின்னரே ஓய்வூதியம் வழங்கப்படும். தற்போது 2022- 2023 ம் ஆண்டிற்கான ஆயுள் சான்றை இணைய வழியில் சமர்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்கள் தங்களது ஆயுள் சான்றை https://tnuwwb.tn.gov.in என்ற இணைய முகவரியில், பென்ஷனர் லைப் சர்ட்டிபிகேட் (Pensioner Life Certificate) என்பதை தேர்வு செய்து, தங்களது பதிவு எண் மற்றும் கைப்பேசி எண்ணை உள்ளீடு செய்து பெறப்படும் ஒருமுறை கடவுச் சொல்லை கொண்டு உள் சென்று தங்களது சுய விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஆதார், குடும்ப அட்டை, ஓய்வூதிய ஆணை, வங்கி கணக்கு எண்கள் போன்ற விவரங்களை உள்ளீடு செய்து, அந்த ஆவணங்களை அசலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இணைய வழியில் ஆயுள் சான்று சமர்ப்பிக்க முடியாதவர்கள் கடலுார் செம்மண்டலம், தீபன் நகரில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக ஓய்வூதியப் பிரிவில் உரிய ஆவணங்களுடன் கொடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சந்தேகம் இருப்பின் 04142-290280, 04142-291398 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.