உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
ஈ.பத்மநாபன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதிப்பிற்குரிய பன்னீர்செல்வம் அவர்களுக்கு...எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். அந்த வகையில், உங்களுடன் சில கருத்துகளை பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். 2011முதல், 2021வரையிலான,10ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சி மிக நன்றாக இருந்தது.
ஏதோ சில காரணங்களால், 2021ல் நாம் ஆட்சியை இழந்தோம். யார் வரக்கூடாது என்று எண்ணினோமோ, அவர்கள் கையில் ஆட்சி சென்று விட்டது. நம் மிகப்பெரிய குறிக்கோள் என்னவென்றால், கட்சியை நன்றாக கட்டுக்கோப்பாக கொண்டு வந்து, மீண்டும், 2026ல் ஆட்சியைப் பிடிப்பதே; மக்களும் அதையே விரும்புகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், கட்சிக்கு தேவை ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா என்று, உங்களுக்குள் ஒரு போராட்டம் நிலவுகிறது. தற்போது, கட்சிக்கு எந்தத் தலைமை இருந்தாலும் சரி; கட்சியும், மக்களும், மாநிலமுமே முக்கியம் என்பதை மனதில் கொண்டு, நீங்களும், பழனிசாமியும் செயல்பட வேண்டும்.
எனவே, பழனிசாமியும், நீங்களும் உங்களுக்குள் இருக்கும், 'ஈகோ'வை விடுத்து, யாருடைய துணையும் இன்றி தனியாக சந்தியுங்கள். அவருடைய வீட்டிலோ அல்லது உங்களுடைய வீட்டிலோ, நீங்கள் இருவரும் சந்தித்து, மனம் விட்டுப் பேசுங்கள்; திட்டிக் கொள்ளுங்கள்; கட்டிக் கொள்ளுங்கள். ஆனால், முடிவு நல்லதாக இருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர்., விட்டுச் சென்ற கட்சியும், அதன் ஆட்சியும், மக்களுக்கு இன்னும் பற்பல ஆண்டுகள் உதவிகரமாக இருக்க வேண்டும். 'ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்பர். அந்த நிலை ஏற்பட்டு விட, நீங்கள் காரணமாகி விடக்கூடாது. இருவரும் ஒன்றுபட்டு, விட்டுக் கொடுத்து செயல்படுங்கள். இது, என் வேண்டுகோள் மட்டுமின்றி, லட்சக்கணக்கான எம்.ஜி.ஆர்., ரசிகர்களின் வேண்டுகோளாகும்.