சென்னை : 'அக்னிபத்' ராணுவ வீரர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம், திருச்சி மண்டலம் சார்பில், ஆக., 21 முதல், செப்., 1 வரை, நாகர்கோவிலில் நடைபெறுகிறது.
இதுகுறித்து, ராணுவத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ், அக்னிவீர் வீரர்களுக்கான 'ஆன்லைன்' பதிவு, திருச்சி மண்டலம் சார்பில், ஜூலை 1 முதல், ஜூலை 30 வரை நடைபெறுகிறது.
திருச்சி மண்டலத்தின் கீழ், திருச்சி, கரூர், பெரம்பலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலுார், தென்காசி மற்றும் காரைக்குடி ஆகிய மாவட்டங்கள் வருகின்றன.
இந்த மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு, ஆக., 1௦க்கு பின் அனுமதி கடிதம் அனுப்பப்படும்.அனுமதி கடிதம் பெறும் விண்ணப்பதாரர்கள், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில், ஆக., 21 முதல், செப்., 1 வரை நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
திருப்பூர்
திருப்பூர் மண்டலத்தில், அக்னிவீர் வீரர்களுக்கான ஆன்லைன் பதிவு, ஜூலை 5 முதல், ஆக., 3 வரை நடைபெறுகிறது. இந்த மண்டலத்தின் கீழ், கோவை, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு, மதுரை, நாமக்கல், நீலகிரி, சேலம், தேனி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வருகின்றன.இந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆர்வம் உள்ள இளைஞர்கள், joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு, ஆக., 14க்கு பின் அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.பதிவு செய்யும் வீரர்கள், திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள டி.இ.ஏ., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், செப்., 20 முதல், அக்., 1 வரை நடைபெறும் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.இந்த ஆள்சேப்பு முகாம், பொதுப் பணி, தொழில்நுட்பம், கிளார்க், ஸ்டோர் காப்பாளர் ஆகிய பணிகளுக்காக நடைபெறுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.