பல்லடம் : கோர்ட் உத்தரவுப்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள, குடியிருப்பினருக்கு பல்லடம் தாசில்தார் காலக்கெடு விதித்துள்ளார்.பல்லடம் அருகே ராயர்பாளையம் - செங்குட்டை பகுதியில், 42 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற குடியிருப்பினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியினர், கடந்த, 2021ல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.மனுவை நிராகரித்த கோர்ட், ஆக்கிரமிப்பு அகற்ற காலக்கெடு விதித்துள்ளது. அதன்படி, வரும், 8ம் தேதி அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதி மக்களுடன் சந்திப்பு கூட்டம் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.அப்பகுதியினர் கூறுகையில், 'நீண்ட காலமாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். திடீரென வீடுகளை காலி செய்தால், வேலை, குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும். எனவே, நீர்நிலை புறம்போக்கு என்பதை வகை மாற்றம் செய்து, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீரென காலி செய்வது எங்களால் இயலாது,' என்றனர்.
தாசில்தார் நந்தகோபால் பேசுகையில், ''தமிழகம் முழுவதும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் ஐகோர்ட் உத்தரவின்படி அகற்றப்படுகின்றன. கோர்ட் உத்தரவை மீறி எங்களால் செயல்பட முடியாது. வரும், 8ம் தேதி ஆக்கிரமிப்புகளை கட்டாயம் அகற்ற வேண்டும். எனவே, உடமைகளை பாதுகாத்து, முன்கூட்டியே அகற்றி கொள்ளுங்கள். இல்லாவிடில், கோர்ட் விதித்த காலக்கெடுவுக்குள் ஆக்கிரமிப்புகள் கட்டாயம் அகற்றப்படும்,'' என்றார்.தாசில்தாரின் இந்த முடிவை ஏற்காத அப்பகுதியினர், பதில் கூறாமல் அங்கிருந்து புறப்பட்டனர்.