ஜூலை 7, 2006
'முடங்க அல்ல முடக்கம்; இன்னொன்றை தொடங்க' என்பதை உணர்த்தியவர் டாக்டர் ஜி.வெங்கடசாமி. துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகேஉள்ள அயன்வடமலாபுரத்தில், விவசாயி கோவிந்தப்பனுக்கு மகனாக, 1918 அக்டோபர், 1ல் பிறந்தவர் வெங்கடசாமி. சென்னை மருத்துவக்கல்லுாரியில் படித்தவர்; ராணுவத்தில் மருத்துவரானார்.
மலேஷியா, சிங்கப்பூர், மியான்மர் நாடுகளில், யுத்த களங்களில் மருத்துவ பணியாற்றினார். மியான்மர் காடுகளில் முகாமிட்டிருந்த போது விஷப் பூச்சி கடித்ததால், சரும நோய்க்கும், முடக்குவாதத்துக்கும் ஆளானார். ராணுவம் அவரை பணியிலிருந்து விடுவித்தது. பின், மகப்பேறு மருத்துவம் படித்தார். விரல்கள் ஒத்துழைக்காததால், கண் மருத்துவம் படித்து, விடாமுயற்சியால் அறுவை சிகிச்சை பழகினார்.
மதுரை அரசு மருத்துவமனையில், கண் மருத்துவ துறையின் முதல் தலைவரானார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கண் அறுவை சிகிச்சைகளை செய்தார். ஓய்வுக்குப் பின், தன் குரு அரவிந்தரின் பெயரில், கண் மருத்துவமனையை துவக்கினார். இலவச கண் அறுவை சிகிச்சைகள் செய்து, கண்ணாடிகளை வழங்கினார்.
மருத்துவ பணியால் இறைப்பணி செய்த வெங்கடசாமி, ௨௦௦௬ல் இதே நாளில், தன், 87வது வயதில் காலமானார். அரவிந்த் கண் மருத்துவமனைகள், இன்றும் இலவச பிரிவுடன் இயங்குகின்றன. பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற இவரின் நுாற்றாண்டில், கூகுள், இவருக்கு 'டூடுள்' வெளியிட்டது. ஏழை விழிகளின் ஒளி, ஒளியுடன் கலந்த தினம் இன்று!