தஞ்சாவூர்:தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், மனமுடைந்த விவசாயி, 2 ஏக்கரில் இருந்த தென்னை மரங்களை வெட்டி அழித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால், தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, தென்னை விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே கீழதிருப்பந்துருந்தி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம், 57.
தேங்காய் விலை வீழ்ச்சியால் பெரிதாக பாதிக்கப்பட்ட அவர், கண்டியூரில் உள்ள 2 ஏக்கர் தோப்பில் இருந்த, 143 தென்னை மரங்களை வெட்டி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ராமலிங்கம் கூறியதாவது:ஒரு மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க, குறைந்தது, 40 ரூபாயும், தேங்காயை அள்ளி குவிக்க, 300 ரூபாயும் சம்பளம் கொடுக்க வேண்டியுள்ளது. ஆனால், விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கும் தேங்காயை, வியாபாரிகள், 30 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.சில ஆண்டுகளாக, தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்து உள்ளதால், மாற்று பயிர் சாகுபடி செய்யலாம் என, திட்டமிட்டுள்ளேன்.பிள்ளை போல் வளர்த்து, காய்க்கும் தென்னை மரங்களை வெட்டுவது வேதனையாக தான் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.