ராம்நகர்:ராம் நகர் ரயில் நிலைய சாலையின், யூகோ வங்கி அருகில் பழைய வீட்டுமனை ஒன்றில், கடை கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிய போது, பூமிக்குள் புதைந்து போன புராதன கட்டடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம், ராம் நகர் ரயில் நிலைய சாலையில், யூகோ வங்கி அருகில் நவாஜ் அகமது என்பவருக்கு சொந்தமான, காலி வீட்டுமனை ஒன்றில் கடை கட்ட முடிவு செய்தார். இதற்காக சில நாட்களுக்கு முன், அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்குள் புதைந்து போன, புராதன கட்டடம் ஒன்று தென்பட்டது. பல ஆண்டுகள் மண்ணில் புதைந்து போயிருந்தும், கட்டடத்தின் சுவர்கள் மிகவும் உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது என்ன கட்டடம் என்பது, தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் இதன் வடிவத்தை கவனித்தால், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள, திப்பு காலத்திய வீடு போன்றுள்ளது. இப்பகுதியில் திப்பு ஆட்சியின் அடையாளம் இருப்பதால், ஆயுத கிடங்காக இருக்கலாம் என, சிலர் கூறுகின்றனர்.ராம்நகர் பகுதி, சுதந்திரத்துக்கு முன் பேரி குளோஸ் ஆட்சி நடத்தியதால், குளோஸ் பேட் என்ற பெயர் இருந்தது.
இதற்கு சாட்சியாக ராம்நகரின் இதய பகுதியிலுள்ள கல்வெட்டு, தொல் பொருள் துறையின் அலட்சியத்தால் பாழாகியுள்ளது.தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கட்டடம், ராம்நகரின் வரலாற்றை ஆராய வேண்டியுள்ளது.புராதன கட்டடத்தின் மீதே, பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது பூமிக்கடியில் வெறும் ஆறேழு அடிகளின் கீழ்ப்பகுதியில், கட்டடம் தென்பட்டிருப்பது, வரலாற்று சின்னங்கள், அடையாளங்களை பாதுகாப்பதில், அரசு தவறியுள்ளது என்பதற்கு உதாரணமாக உள்ளது.
வீட்டுமனை உரிமையாளர் நவாஜ் அகமது கூறியதாவது:இது மிகவும் பழைய கட்டடம். இதை நாங்கள் வேறொருவரிடமிருந்து வாங்கினோம். தற்போது கடை கட்ட, அஸ்திவாரம் தோண்டும் போது, இக்கட்டடம் தென்பட்டது. இந்த கட்டடத்தில் பொருட்கள் எதுவும் இல்லை.கடந்த 1930ல் நகராட்சி தண்ணீர் தொட்டி கட்டியதாக, சிலர் எங்களிடம் கூறினர். 1960ல் இந்த இடத்தை அப்துல் அஜீம் என்பவர், நகராட்சி ஏலத்தில் வாங்கினார். அதன்பின் தன் உறவினருக்கு அன்பளிப்பாக, எழுதிக் கொடுத்தார். இந்த இடத்தை 2009ல் நாங்கள் வாங்கினோம்.இவ்வாறு அவர் கூறினார்.