மங்களூரு:மழை காலத்தில் கடலில் ஏற்படும் சீற்றத்தை, சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, கரையில் தங்கம் கிடைக்கிறதா என்பதை தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மால்பே கடற்கரையில் நேற்று சிலர் எதையோ நீண்ட நேரம் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் என்னவென்று கேட்டபோது, 'தங்கம் தேடுவதாக' கூறினர். ஏதோ விளையாட்டாக கூறுகின்றனர் என நினைத்தால், உண்மையாகவே, அவர்கள் தங்கத்தை தான் தேடுவதாக கூறினர்.
அவர்களிடம் மேலும் விசாரித்தபோது, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணியர், கடற்கரைக்கு வருவர். கடலில் நீச்சலடிக்கும் போது, பலரின் தங்க செயின்கள், மோதிரங்கள், அலையில் சிக்கி காணாமல் போகும்.இந்த தங்க நகைகள், கடலில் ஏற்படும் சீற்றத்தால், கரை ஒதுங்கும். இதை எடுப்பதற்கென்றே, சிலர் சுற்றித் திரிகின்றனர்.
இந்நிலையில், மழை காலம் துவங்கியுள்ளதால், கடலில் சீற்றம் ஏற்பட்டு, கடற்கரையில் அரிப்பு ஏற்படுகிறது.இதையடுத்து, முலுார் - தோட்டம் இடையே உள்ள கடற்கரையில் மாவட்ட கலெக்டர் குர்மா ராவ், அதிகாரிகளுடன்ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதியினர் தெரிவித்த கருத்துகளை கேட்டு கொண்ட கலெக்டர், இது குறித்து மீன்வளம், துறைமுகம், ஒப்பந்ததாரர்களிடம் ஆலோசித்து, மேலும் கரை அரிப்பு ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.