கோவை : நல்லாயன் துவக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு, தலைமைத்துவத்தை வளர்க்கும் விதமாக, பள்ளியில் பல்வேறு பதவிகளுக்கான மாணவர் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது.நல்லாயன் துவக்கப்பள்ளியில் குழந்தைகள் மத்தியில் குழு உணர்வு, தலைமை பண்பு, பொது பணிகளில் ஈடுபடுதல் போன்ற பண்புகளை வளர்க்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்தாண்டும் மாணவர் தலைவர், துணை தலைவர், உணவு தலைவர், விளையாட்டு தலைவர், சுற்றுச்சூழல் தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில், ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் போட்டியிட்டனர்.ஒரு பதவிக்கு மூன்று பேர் என ஐந்து பதவிகளுக்கு, 15 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில், ஒவ்வொரு மாணவருக்கும், பேனா, பென்சில், புத்தகம், கரும்பலகை, கிரிக்கெட் மட்டை, கால்பந்து, வாழைப்பழம், மரம், செடி என பிரத்யேக சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. லேப்டாப்பில் இச்சின்னங்கள் இடம்பெற்றிருக்கும். விரும்பிய வேட்பாளர்களுக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என 300க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.
தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் கிளமென்ட் விமல் கூறுகையில், ''மாணவர்கள் கல்வி மட்டுமல்லாது, தலைமை பண்பின் அவசியம் குறித்தும், தெரிந்து கொள்ளும் விதமாகவே, இந்த தேர்தல் நடத்தப்பட்டது.இந்த தேர்தலுக்கான, வேட்பு மனு தாக்கல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு கடந்த 1ம் தேதி நடந்தது. 4 மற்றும் 5ம் தேதிகளில் வேட்பாளர்கள் பிரசாரம் நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை 8ம் தேதியும், பதவி பிரமாணம் வரும் 11ம் தேதியும் நடக்கவுள்ளது. இதன் மூலம், ஜனநாயக நடைமுறைப்படி வேட்பாளர் தேர்வு செய்வதின் அவசியத்தையும் இளம்பருவத்திலேயே, மாணவர்கள் அறிந்து கொள்ள முடிகிறது,'' என்றார்.