செய்திகள் சில வரிகளில் சேலம்

Added : ஜூலை 07, 2022 | |
Advertisement
போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க மையம்சேலம், ஜூலை 7-போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு உதவ, எஸ்.பி., அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போலீஸ், தீயணைப்பு, சிறைத்துறை காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வுக்கு, இணைய வழி மூலம் விண்ணப்பங்கள்

போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க மையம்
சேலம், ஜூலை 7-
போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு உதவ, எஸ்.பி., அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போலீஸ், தீயணைப்பு, சிறைத்துறை காலி பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் தேர்வுக்கு, இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் விண்ணப்பிக்கும் இளைஞர்கள், பெண்களுக்கு உதவ, ஜூலை, 7(இன்று) முதல், ஆக., 18 வரை சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் உதவி மையம் செயல்பட உள்ளது. விண்ணப்பிப்பது தொடர்பாக உதவி வேண்டுவோர், இந்த மையத்தை காலை, 9:30 முதல் மாலை, 6:00 மணி வரை நேரடியாக அணுகலாம். விபரம் பெற, 9445978599 என்ற எண்ணில் அழைக்கலாம்.
ஜவுளி நிறுவனத்தில்
பொருட்கள் அபேஸ்
சேலம், ஜூலை 7-
ஜவுளி நிறுவனத்தில், மின்மோட்டார் உள்பட, 25,900 ரூபாய் மதிப்பில் பொருட்களை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
சேலம், சூரமங்கலம், சுப்ரமணியம் நகரை சேர்ந்தவர் தீனதயாளன், 54. அப்பாவு நகரில், ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் ஜவுளி நிறுவனத்தை நடத்துகிறார். அங்கு புகுந்த மர்ம நபர், எலக்ட்ரிக் மோட்டார், ஆயில் தொட்டி, இரும்பு பொருட்கள், செட் மோட்டார் என, 25 ஆயிரத்து, 900 ரூபாய் மதிப்பிலான பொருட்களை, கடந்த, 4ல் திருடிச்சென்றார். இதுகுறித்து நேற்று முன்தினம் தீனதயாளன் அளித்த புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஜாமினில் வந்தவர் சிக்கினார்
சேலம், ஜூலை 7-
நெத்திமேடு, காமராஜர் நகரை சேர்ந்தவர் மூர்த்தி, 25. கடந்த, 2020 மார்ச்சில், டவுன் போலீசார், வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், அவரை, நேற்று காலை, டவுன் போலீசார் கைது செய்தனர்.
100 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
தாரமங்கலம், ஜூலை 7-
தாரமங்கலம் நகராட்சியில், கமிஷனர் முஸ்தபா தலைமையில் அதிகாரிகள், நேற்று, சாலையோர கடை, தள்ளுவண்டி, டீ, மளிகை கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, 6,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
கமிஷனர் கூறுகையில், ''பிளாஸ்டிக் பொருட்களை விற்பது தெரிந்தால், கடை உரிமம் ரத்து செய்யப்படும்,'' என்றார்.
அரசு பள்ளி கட்டடம்
கல்வி அலுவலர் ஆய்வு
பனமரத்துப்பட்டி, ஜூலை 7-
பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி ஊராட்சி, வெடிக்காரன்புதுார் அரசு தொடக்கப்பள்ளி கட்டடம் சேதமடைந்ததால், ஒன்றிய கமிஷனரிடம் பெற்றோர் மனு அளித்தனர். இதுகுறித்து, காலைக்கதிர் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, நேற்று காலை, பனமரத்துப்பட்டி வட்டார கல்வி அலுவலர் கிரிஜா, வெடிக்காரன்புதுார் பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் புது கட்டடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக, தெரிவித்தார்.
இதுகுறித்து, ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், 'பள்ளிக்கு புது கட்டடம் கட்ட, முன்மொழிவு தயார் செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு வந்தவுடன், கட்டுமானப்பணி மேற்கொள்ளப்படும்' என்றனர்.
சேலம் மாவட்டத்தில்
32.8 மி.மீ., மழை
சேலம், ஜூலை 7-
சேலம் மாவட்டத்தில், 32.8 மி.மீ., மழை பதிவானது.
சேலம் மாவட்டத்தில் சில நாளாக மாலையில் மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து இதமான சீதோஷ்ண சூழல் காணப்படுகிறது. நேற்று முன்தினம், தம்மம்பட்டி, காடையாம்பட்டி, ஏற்காடு, ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. குறிப்பாக, ஏற்காட்டில் சாரல் மழை பெய்து, பனிப்பொழிவு, கடும் குளிர் காணப்பட்டது. நேற்றும், காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வெயில் தாக்கம் குறைந்திருந்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விபரம்: தம்மம்பட்டி, 10 மி.மீ., காடையாம்பட்டி, 7.2, ஏற்காடு, ஆனைமடுவு தலா, 5, கரியகோவில், 3, ஆத்துார், 2.4, சேலம், 0.2 மி.மீ., என, மாவட்டம் முழுதும், 32.8 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
இன்று 7 கி.மீ., ஓட்டப்போட்டி
விநாயகா மிஷன்ஸ் ஏற்பாடு
சேலம், ஜூலை 7-
விநாயகா மிஷன்ஸ் நிறுவன தலைவர் சண்முகசுந்தரத்தின் பிறந்த நாளையொட்டி, சேலம், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலை சார்பில், மாவட்ட அளவில், 7 கி.மீ., தொடர் தொலைவு ஓட்டப்போட்டி, இன்று காலை, 6:40 மணிக்கு நடக்கிறது.
தேசிய தடகள வீராங்கனை பத்மஸ்ரீ உஷா, சேலம், மகாத்மா காந்தி மைதானத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில், 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். விநாயகா மிஷன்ஸ் உடற்கல்வியியல் கல்லுாரி, காந்தி மைதானத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பரிசுத்தொகை, சான்றிதழ் வழங்கப்படும். போட்டியாளர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
சூளைக்கு செம்மண் விற்பனை?
பொக்லைனை சிறைபிடித்த மக்கள்
கெங்கவல்லி, ஜூலை 7-
கெங்கவல்லி, நடுவலுார் ஏரியில் வண்டல் மண் எடுக்க, அரசு மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி சில விவசாயிகள், செங்கல் சூளைக்கு செம்மண் விற்பதாக புகார் எழுந்தது. நேற்று முன்தினம், ஏரியில் மண் அள்ளியபோது, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து, மக்கள் வாக்குவாதம் செய்தனர். வருவாய்த்துறையினர், பேச்சு நடத்தினர். அப்போது, விவசாயத்துக்கு தவிர்த்து, வணிக பயன்பாட்டுக்கு செம்மண் எடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும். அளவு மீறி மண் எடுத்தாலும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, வருவாய்த்துறையினர் எச்சரித்தனர். பின், மக்கள் கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X