தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டு கைத்தறி நெசவாளர் சங்கங்களில் உள்ள கைத்தறி ஜவுளி ரக விற்பனையை மேம்படுத்த, கைத்தறி துறை, கோ - ஆப்டெக்ஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம், சேலம், திருபுவனம் பட்டு கைத்தறி சங்கங்கள், கோ - ஆப்டெக்ஸில் தேக்கத்தில் உள்ள பட்டு சேலைகளை விற்க, 'மெகா பட்டு மேளா'வை நடத்தி வருகிறது.
அதில் பழைய, கிழிந்த, பயன்படுத்த முடியாத, 'வெள்ளி ஜரிகை பட்டு சேலைகள்' சிறந்த மதிப்பீட்டாளர்களால், மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான விலைக்கு ஈடாகவோ அல்லது அதிகமாகவோ பட்டு சேலைகளை தேர்வு செய்து கொள்ளலாம். மதிப்பீடு தொகை போக மீதி தொகை செலுத்த வேண்டும்.
இதற்காக, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புது பட்டு சேலைகள் குவிக்கப்பட்டுள்ளன. சேலம் தங்கம் பட்டு மாளிகையில், 5,000 முதல், லட்சம் ரூபாய் வரை, விலை உள்ள பட்டு சேலைகள், வகை வகையாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், இத்திட்டத்தில் உள்ள சேலைகளுக்கு, 20 முதல், 55 சதவீதம் தள்ளுபடி உண்டு. இத்திட்டம், கடந்த ஜூன், 24ல் தொடங்கியது, ஜூலை, 8ல்(நாளை) நிறைவு பெறுகிறது. இதுவரை, 30 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கோ - ஆப்டெக்ஸில் புது பட்டு சேலைகளை வாங்கி பயன்பெறலாம்.