மாரியம்மன் கோவில்
கும்பாபிஷேகம்
குளித்தலை, ஜூலை 7-
குளித்தலை அடுத்த, கே.பேட்டை தேவேந்திர குல தெருவில், மாரியம்மன், பகவதி அம்மன், பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த, விழா கமிட்டியினர் முடிவு செய்தனர்.
கடந்த, 3ல் காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது. கும்பத்திற்கு, சிவாச்சாரியார்கள் மகா கணபதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, லட்சார்ச்சனை, பூர்ணாஹூதி, திரவியாஹூதி, நாடி சந்தனம், மகா தீபாராதனை உள்ளிட்ட,
4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர்.
நேற்று காலை, நான்காம் கால யாகவேள்வி பூஜை நிறைவடைந்ததும், புனிதநீர் கும்பத்தை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்துவந்து, கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தினர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பகவதியம்மன் கோவில்
கும்பாபிஷேக விழா
கிருஷ்ணராயபுரம், ஜூலை 7-
பிச்சம்பட்டி கிராமத்தில், ராஜகணபதி, பகவதியம்மன், பாம்பலம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிச்சம்பட்டி கிராமத்தில் ராஜகணபதி, பகவதியம்மன், பாம்பலம்மன், கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, கோபுர கலத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிச்சம்பட்டி சுற்று வட்டார பகுதியிலிருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
வரும் 11ல் திருச்சி மண்டல
பி.எப்., குறைதீர் கூட்டம்
கரூர், ஜூலை 7-
திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால, வைப்பு நிதி நிறுவனம் சார்பில், பி.எப்., உங்கள் அருகில் என்ற, குறைதீர்க்கும் நாள் வரும், 11ல் ஆன்லைன் மூலம் நடக்கிறது.
இதுகுறித்து, திருச்சி மண்டல பி.எப்., கமிஷனர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வரும், 11 மதியம், 2:30 முதல், 3:30 மணி வரை நடைபெற உள்ள, குறைதீர் முகாமில், தொழிற்சங்கத்தினர், தொழிலாளர்கள், வேலை அளிப்போர் மற்றும் பி.எப்., ஓய்வூதியர்கள் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புகிறவர்கள், தங்களது குறைகள் குறித்த தகவல்களுடன், யு.ஏ.என்., கணக்கு எண், இ-மெயில் முகவரி, மொபைல் போன் ஆகிய விபரங்களை வரும், 10க்குள், ro.trichy@pfindia.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
சாலையில் குழி; மக்கள் அச்சம்
கிருஷ்ணராயபுரம், ஜூலை 7-
சிந்தலவாடி காளியம்மன் கோவில் சாலையில் குழிகள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் பயணித்து வருகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி காளியம்மன் கோவில் அருகே சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக லாலாப்பேட்டை பகுதியிலிருந்து, சிந்தலவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் மகிளிப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மக்கள் வாகனங்களில் செல்கின்றனர்.
சாலையில் குழிகள் ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்படைகின்றனர். இந்த சாலையில் உள்ள பெரிய குழிகளுக்கு மண் கொட்டி, சரி செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாங்கல் அருகே குட்கா
பொருட்கள் பறிமுதல்
கரூர், ஜூலை 7-
கரூர் அருகே, பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை, குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், ஆத்துார் வி.ஏ.ஓ.,வாக இருப்பவர் குப்புசாமி. இவர், வாங்கல் அருகே பெரிய வடுகம்பட்டியில் முருகன், 42, என்பவர் வீட்டில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, புகையிலை, குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி உள்ளிட்ட போலீசார், நேற்றுமுன்தினம் முருகன் வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது, 51 ஆயிரத்து, 390 ரூபாய் மதிப்புள்ள, 104.440 கிலோ புகையிலை, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, முருகன் மீது வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
தகராறில் ஈடுபட்ட
'போதை' மருமகன் கைது
கரூர், ஜூலை 7-
வெள்ளியணை அருகே, மாமனாரை உருட்டு கட்டையால் அடித்த, மருமகனை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அமராவதி நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், 50; இவரது மகள் காயத்திரி, 28; பஞ்சப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார், 35, என்பவர் திருமணம் செய்துள்ளார். செந்தில்குமார் நாள்தோறும் மது அருந்தி விட்டு, வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் செந்தில்குமாரிடம், ஏன் மது அருந்திவிட்டு, மகள் காயத்திரியிடம் தகராறு செய்கிறீர்கள் என, மாரியப்பன் கேட்டுள்ளார்.
அப்போது, ஆத்திரமடைந்த செந்தில்குமார், மாரியப்பனை உருட்டு கட்டையால் அடித்துள்ளார். அதில், காயமடைந்த மாரியப்பன், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். மாரியப்பன் கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார் செந்தில்
குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
லாலாப்பேட்டையில்
சிறப்பு மருத்துவ முகாம்
கிருஷ்ணராயபுரம், ஜூலை 7-
லாலாப்பேட்டை பகுதியில், பொது மருத்துவத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம், நேற்று நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, லாலாப்பேட்டை பகுதியில், பொது மருத்துவத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், ரத்தழுத்தம் ஆகிய மருத்துவ பரிசோதனைகள் பார்க்கப்பட்டன. இதில், டாக்டர் தினேஷ்குமார் மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். முகாமில், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.