குறுகலான நொய்யல் பாலத்தில், போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்களில் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரூரிலிருந்து, 21 கி.மீ., தொலைவில், ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் ஆற்றுப்பாலம் உள்ளது. பழமையான இந்த பாலத்தில், லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்கள் செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு பஸ் சென்றால், எதிரில் மற்றொரு பஸ் செல்ல முடியாத அளவுக்கு, பாலம் குறுகியதாக உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும், பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால், இரவில் இப்பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
இந்த பாலம் கட்டப்பட்டு, 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் தடுப்பு சுவர்களில் உள்ள கான்கிரீட், பல இடங்களில் உதிர்ந்துவிட்டன. இரவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், பாலத்திற்கு கீழே குடிமகன்களின் கூடாரமாக மாறி உள்ளது. வெளிச்சம் இல்லாத குறுகிய பாலத்தில், இரவில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.