போதையில் ரகளை செய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்| Dinamalar

போதையில் ரகளை செய்த தலைமை ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

Added : ஜூலை 07, 2022 | |
குடிபோதையில் கல்வி அலுவலகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட துவக்கப்பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.நாமக்கல்லை சேர்ந்தவர் திருச்செல்வன், 52. இவர், சுண்டைக்காய்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சுபா, திண்டமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். பள்ளியின் வங்கி


குடிபோதையில் கல்வி அலுவலகத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்ட துவக்கப்பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
நாமக்கல்லை சேர்ந்தவர் திருச்செல்வன், 52. இவர், சுண்டைக்காய்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சுபா, திண்டமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். பள்ளியின் வங்கி கணக்கை, வேறொரு வங்கிக்கு மாற்ற, வட்டார வளமைய அதிகாரி கள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமையாசிரியர் திருச்செல்வன், நேற்று மதியம், 12:00 மணிக்கு, குடிபோதையில் வந்து, நாமக்கல் வட்டார வளமையத்தில் உள்ள பெண் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
மேலும், அங்குள்ள நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தன் காரில் அதிவேகமாக, மற்றவர்களை பயமுறுத்தும் வகையில் சுற்றி சுற்றி வந்தார். தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு வந்திருந்த பலரும், திருச்செல்வனின் செயலால் அதிர்ந்தனர்.
இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரியிடம், கல்வித்துறையினர் புகார் தெரிவித்தனர். தலைமையாசிரியர் திருச்செல்வன், ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதுடன், தன்னை, 'சஸ்பெண்ட்' செய்யும்படி குடிபோதையில் மிரட்டினார். தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட தலைமையாசிரியர் திருச்செல்வனை, ஆசிரியர்கள் சிலர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்ட கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த நாமக்கல் வட்டார கல்வி அலுவலர் மாதவன் கூறுகையில், ''தலைமையாசிரியர் திருச்செல்வனிடம், விளக்கம் கேட்டு '17 பி சார்ஜ் மெமோ' வழங்கப்பட்டு, பதில் கேட்கப்படும். சம்பந்தப்பட்ட ஆசிரியர், ஒரு வாரத்துக்குள், மாவட்ட கல்வி அலுவலருக்கு பதில் அளிக்க வேண்டும்,'' என்றார்.
சஸ்பெண்ட்: இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங், தலைமை ஆசிரியர் திருச்செல்வத்தை, 'சஸ்பெண்ட்' செய்ய உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணியன், தலைமை ஆசிரியரை,'சஸ்பெண்ட்' செய்து நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X