தாளவாடி அருகே யானை மிதித்ததால் இறந்த விவசாயின் உடலை எடுக்க விடாமல், உறவினர்கள் மற்றும் விவசாயிகள் சாலை
மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தாளவாடி வனச்சரகம் திகனாரை செல்லும் வழியில் தர்மாபுரத்தை சேர்ந்த மல்ல நாயக்கர்,72; தன் சொந்த நிலத்தில் வாழை பயிரிட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு காவலுக்காக சென்றிருந்தார்.
நள்ளிரவில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை யானை தோட்டத்தில் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்து சென்றவர் சத்தம் போட்டுக்கொண்டே யானை இருக்கும் இடம் தெரியாமல் அருகில் சென்ற போது, யானை மிதித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். காவலுக்கு சென்றவர் வீடு திரும்பாததால்,
தோட்டத்துக்கு சென்று பார்த்த போது மல்லநாயக்கர் இறந்து கிடப்பதை கண்டு உறவினர்கள்
அதிர்ச்சியடைந்தனர்.
விவசாயிகள், 150க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு உடலை எடுக்க விடாமல் கொங்கள்ளி சாலையில் காலை, 11:30க்கு மறியலில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கூறுகையில், 'சமீப காலமாக யானைகளால் விவசாயிகளுக்கு பெருந்துயரம் ஏற்பட்டு வருகிறது. யானைகள் விவசாய நிலங்களுக்குள் வரும்போது வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தால், யாரும் எட்டி பார்ப்பதில்லை. யானைகள் ஊருக்குள் புகாதவாறு அகழி அமைக்க வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தநடவடிக்கையும் இல்லை' என்றனர்.
தாளவாடி போலீசார், தாளவாடி வனத்துறையினர் ஆசனுார் கோட்ட வன அதிகாரி தேவேந்திர குமார் மீனா, தாளவாடி வனச்சரகர் சதீஷ் கமல் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தேவேந்திர குமார் மீனாவிடம், விவசாயிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வனத்துறை சார்பில் இழப்பீடாக 5 லட்சம் மற்றும் வனத்துறையின் சிறப்பு நிதியில் இருந்து, இரண்டரை லட்சம் ரூபாய் என ஏழரை லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்தனர். அகழி அமைக்கும் பணி ஜூலை 7ம் தேதி தொடங்கப்படும் என கூறியதை தொடர்ந்து , விவசாயிகள்,
4 மணி நேரத்துக்கு பின் மறியலை கைவிட்டனர். முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய், விவசாயியின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது. மல்லநாயக்கர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.