வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவாரூர் : திருவாரூர் அருகே, 100 வயதான முதியவர், தன்னம்பிக்கையுடன், கொல்லுப்பட்டறை நடத்தி சம்பாதித்து, மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.
திருவாரூர் அருகே அலிவலத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராசு, 100. இவரது மனைவி அம்சவள்ளி, 87. இவர்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள். அவர்களில் ஒரு மகன், மகள் இறந்து விட்டனர். மகனும், மகளும் காரைக்கால் பகுதியில், அவரவர் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். இளைய மகன் காரைக்காலில் வெல்டராக பணிபுரிகிறார். அலிவலம் கிராமத்தில், மூன்று தலைமுறையாக, கோவிந்தராசு குடும்பத்தினர் கொல்லுப்பட்டறை நடத்தி வருகின்றனர். இங்கு, அப்பகுதி விவசாயிகள், அரிவாள், மண்வெட்டி போன்ற விவசாய கருவிகளை கூர்மைபடுத்தி செல்கின்றனர்.
இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, மனைவியுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார் இந்த முதியவர்.கோவிந்தராசு கூறியதாவது:நான், 15 வயதில் கொல்லுப்பட்டறை தொழிலுக்கு வந்தேன். அன்று முதல், இத்தொழிலை செய்து வருகிறேன். இதில் கிடைத்த வருமானத்தை வைத்து தான், மகன்கள், மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தேன்.முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஒருவரும் உள்ளார். முதல் மனைவி இறந்த பின், 32 வயதில், இரண்டாவது திருமணம் செய்தேன்.
ஒரு நாளைக்கு, 200 - 300 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். இதுவும் நிரந்தரம் அல்ல. சில நாட்கள் வருமானம் வராது. கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டி வருகிறோம்.வயதாகி விட்டதால் வேலை செய்ய முடியவில்லை. முதியோர் உதவித்தொகை, 1,000 ரூபாய் கிடைக்கிறது. அந்த தொகை, மருந்து, மாத்திரை வாங்குவதற்கு சரியாகிவிடும். என் மகன், மகள் அவ்வப்போது வந்து பார்த்துச்செல்வர்.இவ்வாறு, அவர் கூறினார்.