வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
'உதயநிதி அமைச்சராகும்போது, ஒரு ஷிண்டே தி.மு.க.,வில் இருந்து புறப்படுவார்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அடித்து சொல்வதால், உதயநிதியை அமைச்சராக்கும் திட்டத்தையே தள்ளி வைக்க, தி.மு.க., ஆலோசிப்பதாக தெரிகிறது.
![]()
|
உதயநிதி, இளைஞரணி செயலராக பொறுப்பேற்று, நான்காவது ஆண்டு துவங்குகிறது. அவர் இளைஞரணி செயலராக பொறுப்பேற்ற பின், தி.மு.க., ஆட்சி அமைந்துள்ளது. லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றது. உதயநிதி பிரசாரமும் தி.மு.க., வெற்றிக்கு கை கொடுத்தது. 'சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை, தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக உதயநிதி மாற்றி உள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கினால், துறை ரீதியாக இன்னும் அவர் சிறப்பாக செயல்படுவார்' என, மாவட்ட ரீதியாக, தி.மு.க., நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.
ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது பற்றிய பேச்சு அக்கட்சியில் அடிபட்டது.இந்நிலையில், ஹைதராபாதில் நடந்த பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியும், உள்துறை மத்திய அமைச்சர் அமித் ஷாவும், 'வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் கட்சியை அகற்றுவோம்' என, சபதம் ஏற்றனர்.
இந்நிலையில், தி.மு.க., அரசுக்கு எதிராக, தமிழக பா.ஜ., நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், அண்ணாமலை, சிவசேனாவையும் தி.மு.க.,வையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். மஹாராஷ்டிராவில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த உத்தவ் தாக்கரே, வாரிசு அரசியலை ஊக்குவித்ததால், ஏக்நாத் ஷிண்டே என்பவர், அதிருப்தியாளராக கிளம்பினார். அவருக்கு ஆதரவு பெருகவே, ஆட்சி அவர் கைக்கு மாறியது.
![]()
|
அதேபோல், தமிழகத்திலும் தி.மு.க.,வில் வாரிசு அரசியலை எதிர்த்து, ஷிண்டே புறப்படுவார் என, அண்ணாமலை திட்டவட்டமாக பேசினார். அவரது இப்பேச்சு, ஆளும் தி.மு.க., வட்டாரத்தை யோசிக்க வைத்துள்ளது. அதன் காரணமாக, உதயநிதியை அமைச்சராக்கும் திட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைக்கவும், 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பின், உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் எனவும், அக்கட்சியில் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
- நமது நிருபர் -