பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் இன்று, வடக்கிபாளையம் மற்றும் நெ.10 முத்துாரில், ஊராட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கிறது.தமிழகத்தில் ஊராட்சிகளில், காலியாக உள்ள உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் நடக்கிறது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் சிங்காநல்லுார் ஊராட்சியில் இரண்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, முருகன் என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ததால், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆனைமலை ஒன்றியத்தில் வாழைக்கொம்புநாகூர் ஊராட்சியில் இரண்டாவது வார்டுக்கு பிரவின்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் வடக்கிபாளையம் ஊராட்சியில் இரண்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மூன்று பேர் போட்டியிடுகின்றனர். இங்கு, ஒரு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு ஒன்றியத்தின் குருநெல்லிபாளையம் நான்காவது வார்டுக்கு இரண்டு பேர் போட்டியிடுகின்றனர்;
இரண்டு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.நல்லட்டிபாளையம் ஊராட்சியில் நான்காவது வார்டுக்கு சுரேஷ் என்பவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். சொக்கனுார் ஊராட்சியில் ஒன்றாவது வார்டுக்கு அன்னக்கொடி போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.நெ.10 முத்துார் ஊராட்சி தலைவர் பதவிக்கு நான்கு பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இருவர் வாபஸ் பெற்றனர். இருவர் போட்டியிடுவதால், ஊராட்சியில் மொத்தம், இரண்டு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று, ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள், அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.ஓட்டுப்பதிவு இன்று, காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு பின், அந்தந்த ஒன்றியங்களில் ஓட்டுப்பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, வரும், 12ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.